Published by R. Kalaichelvan on 2020-11-26 10:36:02
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் எந்தவித சர்வதேச தலையீடுகளும் வருவதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டின் உரிமைகள் குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் எமக்கு இருக்க வேண்டும் என்பதற்காகவே ஜெனிவா பிரேரணையில் இருந்து வெளியேறினோம் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சபையில் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையின் பிரகாரம் உள்ளக ரீதியில் உண்மைகளை கண்டறிய நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஊடகம், வெளிவிவகார அமைச்சுகள் மற்றும் பிராந்திய உறவு அலுவல்கள் இராஜாங்க அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
எமது அரசாங்கம் நாட்டில் சகல இன மக்களுடனும் இணைந்தே பயணிக்கின்றது. அவ்வாறு இருக்கையில் எந்தவொரு சர்வதேச நாடும் எமது உள்ளக விடயங்களில் தலையிடுவது எமக்கு விருப்பமில்லை.
நாம் ஏனைய நாடுகளின் விடயங்களில் அவர்களுக்கு மதிப்பளித்து செயற்படுகின்றோம். அதேபோல் எமது நாட்டின் உரிமைகள் குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் எமக்கு இருக்க வேண்டும்.
இதனைத்தான் ஜெனிவாவில் நாம் தெரிவித்தோம். மனித உரிமைகள் பேரவை கொண்டுவந்த பிரேரணையை நாம் நிராகரிக்கவும் காரணம் அதுவேயாகும். இந்த யோசனைகளை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது எமது தேசிய நிறுவனங்களை பலவீனப்படுத்தும்.
அதேபோல் அரசியல் அமைப்பில் உள்வாங்கப்படாத காரணிகள் இதில் உள்ளடக்கப்பட்டது. குறிப்பாக பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவது என்ற காரணிகள் இருந்தது. அதேபோல் உள்ளக விடயங்களில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கும் காரணிகளும் காணப்பட்டது.
இது எமக்கு ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். எமது உயரிய சட்டத்தையே மீறும் செயட்பாடகும். மனித உரிமைகள் பேரவை தொடர்ச்சியாக இந்த செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபை செயற்பாடுகள் குறித்து பார்த்தால், அது ஒரு அடிப்படையை காரணமாக கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அங்கம் வகிக்கும் சகலருக்கும் சமமான உரிமைகளை வழங்குவது அவசியம்.
அதில் எந்த மாற்றங்களையும் செய்ய முடியாது என்றே கூறப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் ஒரு நாடு இன்னொரு நாட்டில் அனாவசியமான தலையீடுகளை ஏற்படுத்த முடியாது. இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்கும் செயற்பாடுகளில் நாம் இணைந்து செயற்படுவோம்.
ஆனால் எமது உள்ளக விடயங்களில் சட்ட உள்நுழைவுகளை கொண்டுவர முடியாது.எனினும் எமது நாட்டின் முக்கியமான சாட்சிகள் குறிப்பாக இராணுவம் சார்ந்த சாட்சிகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் பலமான நாடுகள் வேண்டுமென்றே எமது சாட்சிகளை நிராகரித்துள்ளனர். எமது இராணுவம் யுத்த குற்றம் செய்யவில்லை, சர்வதேச சட்டத்திற்கு உற்பட்டே எமது இராணுவம் போர் புரிந்தது என்பதை சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இவற்றை எவரும் கருத்தில் கொள்ளவில்லை.
இலங்கை எப்போதும் சுயாதீன நாடாக செயற்படவே நினைக்கின்றோம். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. இதனை கொண்டு நாம் உண்மைகளை கண்டறிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.