(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலகுமானால் அது நிச்சயமாக சர்வதேச விசாரணை ஒன்றுக்கு நாட்டை கொண்டுசெல்லும், அதனை அரசாங்கத்தினால் தடுக்க முடியாது என  என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.

 

இலங்கையின் போர்குற்ற விவகாரத்தில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை மீறியதன் விளைவாக 2015 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான பொருளாதார தடை வரும் என்பதையும், தான் அழுத்தங்களை சந்திக்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்து அதற்கு அஞ்சியே மஹிந்த ராஜபக் ஷ விரைவான தேர்தல் ஒன்றுக்கு சென்றார் எனவும் அவர் கூறினார்.

ஊடகம், வெளிவிவகார அமைச்சுகள் மற்றும் பிராந்திய உறவு அலுவல்கள் இராஜாங்க அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 2010 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, பாராளுமன்றத்திற்கு வருகை தர முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருடன் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டார்.

இந்த உடன்படிக்கை குறித்து பாராளுமன்றத்தில் யாரிடமும் எதனையும் தெரிவிக்காது தனது தனித் தீர்மானத்திற்கு அமைய அவர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

அந்த உடன்படிக்கைதான் இன்றும் எமது கழுத்தில் சுருக்குக்கயிறைப் போன்று தொங்கவிடப்பட்டுள்ளது. அன்று மஹிந்த ராஜபக் ஷ குறித்த உடன்படிக்கையை கைச்சாத்திட்ட முன்னர் பாராளுமன்றத்தில் அனுமதியை கேட்டிருந்தால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்த்திருப்பார்கள்.

எனினும் யுத்தத்தை வெற்றிகொண்ட முழுத் திருப்பதியில் அவர் இருந்த காலகட்டமது என்பதால் அந்த உடன்படிக்கை அவசியம் என நினைத்திருப்பார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ' யுத்தத்தில் சர்வதேச சட்டத்தை மீறியதாகவும், அதற்காக இலங்கைக்குள் விசாரணைகளை நடத்துவதாகவும்' வாக்குறுதி கொடுத்தார்.

அதற்காக 2010-2015 காலப்பகுதியில் எமக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது, ஆனால் அதுவரை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆரம்பத்தில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை மீறியதன் காரணமாக 2012,2013,2014 ஆகிய மூன்று ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையில் மூன்று பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டது.

இதன் காரணமாக 2015 ஆம் ஆண்டில் நாம் பொருளாதார தடையை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியான நிலையில் இருந்தோம். 2015 மார்ச் மாதத்தில் எமக்கு எதிரான பொருளாதார தடை வரும் என்ற நிலைமை இருந்தது.

இதனை தெரிந்துகொண்டே மஹிந்த ராஜபக்ஷ, 2015 ஜனவரியில் தேர்தலை நடத்தினார். அவருக்கு ஆட்சியை நடத்த இரண்டு ஆண்டுகள் இருந்தும் அவர் ஜெனிவா நெருக்கடியை அறிந்துகொண்டே தேர்தலுக்கு சென்றார். அந்த நெருக்கடியில் தேர்தலுக்கு சென்று தோல்வியை சந்தித்தார்.

நாம் ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச உறவுகளை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவர முடிந்தது. ஜி8 மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இலங்கையை பாதுகாக்க முடிந்தது.

எமது அரசாங்கம் சர்வதேசத்தை சமாளிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்தது. இந்நிலையில் ஜெனிவாவில் கலந்துகொண்ட எமது பிரதிநிதிகள் மத்தியில் சவால் ஒன்று இருந்தது.

இதில் மஹிந்த ரஜபக் ஷ முன்வைத்த உள்ளக விசாரணை வாக்குறுதியா அல்லது சர்வதேச விசாரணையா என்ற நெருக்கடி முன்வைக்கப்பட்டது.

உள்ளக விசாரணையா சர்வதேச விசாரணையா என பார்த்ததில் நாட்டையும் மஹிந்த ராஜபக் ஷவையும் காப்பாற்ற வேண்டும் என்றால் உள்ளக விசாரணையே சிறந்தது என்ற தீர்மானம் எடுத்தோம். சர்வதேச விசாரணைக்கு நாம் இணங்கியிருந்தால் மஹிந்த ராஜபக் ஷவே பிரதிவாதியாகியிருப்பார்.

எனவேதான் சர்வதேச விசாரணையை தவிர்த்து உள்ளக விசாரணைக்கு நாம் இணக்கம் தெரிவித்தோம். நாமே மஹிந்த ராஜபக் ஷவை மின்சார கதிரையில் இருந்து காப்பாற்றினோம். ஒருவேளை நாம் உள்ளக விசாரணைக்கு இணக்கம் தெரிவிக்காது இருந்திருந்தார் மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிரான சர்வதேச விசாரணை ஒன்றை எதிர்கொள்ள நேர்ந்திருக்கும்.

இப்போது ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது, இப்போது வெளிவிவகார அமைச்சரிடம் நாம் ஒன்றை கேட்கிறோம், 2015 ஆம் ஆண்டில் நாம் இணங்கிய உள்ளக விசாரணையை முன்னெடுக்க மாட்டோம் என்றா நீங்கள் மனித உரிமைகள் பேரவையில் கூறுவீர்கள்? அவ்வாறு நீங்கள் மறுத்தால் இலங்கைக்கு பாரிய நெருக்கடியாக அமையும். அதுமட்டுமல்ல ஐக்கிய நாடுகள் சபையில் ஏகமனதான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒருதலைப்பட்சமாக அதிலிருந்து விலகிக்கொள்ள முடியாது.

அதுமட்டுமல்ல ட்ரம்ப் ஆட்சியில் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து அமெரிக்கா விலகிக்கொண்டது, ஆனால் பைடன் ஆட்சியில் அவர்கள் மீண்டும் வருவார்கள். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னரான நிலைமை உருவாகும். நீங்கள் இதன்போது உள்ளக விசாரணையை நிராகரித்தால் கண்டிப்பாக இது சர்வதேச விசாரணைக்கு செல்லும். அதனை தடுக்க முடியாது என்றார்.