முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 72 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட குற்றச்சாட்டுக்காக ஒக்டோபர் 30 முதல் நேற்று வரையான காலப் பகுதியில் மொத்தமாக 660 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து குடிமக்களும் மேற்கண்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கமைய தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் ஏனைய அனைத்து இடங்களிலும் சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட வர்த்தமானி அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை புறக்கணித்ததாகக் கண்டறியப்பட்ட எந்தவொரு ஸ்தாபனத்தின் நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி, சமூக இடைவெளி பராமரிக்கப்படுவதையும், வெப்பநிலை சரிபார்க்கப்படுவதையும், கை கழுவுதல் வசதிகளையும், நிறுவனங்களுக்குள் நுழைந்து வெளியேறும் அனைத்து நபர்களிடமும் பராமரிக்கப்படும் ஒரு பதிவு புத்தகத்தையும் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.