நுவரெலியா, பிரதேச சபைக்குட்பட்ட நானுஓயா, ரதெல்ல வங்கி ஓயா கீழ் பிரிவு தோட்டத்தில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

நானுஓயா ரதெல்ல வங்கிஓயா கீழ் பிரிவைச் சேர்ந்த 19 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானதையடுத்து வங்கி ஓயா கீழ் பிரிவில் இரண்டு லயன் குடியிருப்புகளில் வசித்த  40 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட குறித்த இளைஞன் கொழும்பிலிருந்து தீபாவளி பண்டிக்கைக்கு வங்கி ஓயாவிலுள்ள தனது வீட்டிற்கு வந்து சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தார் பின்னர் மூன்று நாட்களுக்கு முன் கொழும்பு சென்ற நிலையில் அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் இவருடன் நெருங்கி பழகியவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் நானுஓயா பிரதேச சுகாதார அதிகாரி மேலும் தெரிவித்தார்.