இன்றைய நிலைக்கு காடழிப்பே காரணம்

Published By: Gayathri

25 Nov, 2020 | 04:11 PM
image

அண்மைக் காலமாக ஒட்டுமொத்த உலகமுமே அவ்வப்போது முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் காலநிலைசார் பிரச்சினைகள், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றின் மிகவேகமான பரவல் போன்றவற்றுக்கான அடிப்படைக்காரணமாக காடழிப்பைக் குறிப்பிடலாம்.

அனைவரும் இயந்திரம் போன்று அதிவேகமாகப் பயணித்துக்கொண்டிருக்கின்ற இந்த உலகில் சூழலைப் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்காமையின் விளைவாகவே காட்டுத்தீ, எரிமலை வெடிப்பு, கடல்நீர்மட்டம் உயர்வடைதல், சூழல் வெப்பமடைதல் என இன்னும் பல இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

மனிதனின் செயற்பாடுகளில் ஒன்றான காடழிப்பின் விளைவாக மழைபெய்யும் சுழற்சியில் பாதிப்பேற்படும் போது அதன் தொடர்ச்சியாக மேலும் பல அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. 

அதேபோன்று காடுகளை அழிப்பதால், அங்கு வாழும் விலங்குகள் மற்றும் உயிரினங்கள் அனைத்தும் மனிதர்கள் வாழும் பகுதிகளை வந்தடைகின்றன.

பல்வேறு நோய்களை ஏற்படுத்தக்கூடிய கிருமிகள் விலங்குகளின் உடல்களில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

அவ்வாறிருக்கையில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான இடைத்தொடர்பு உயர்வடைவதனால் புதிய நோய்கள் பலவும் பரவுவதற்கான வாய்ப்பேற்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, எமது நாட்டை எடுத்துக்கொண்டால் காடழிப்பு தொடர்பாக அண்மைக்காலத்தில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். 

காடழிப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை தொடர்ந்து, இது முக்கிய பேசுபொருளாகியிருக்கிறது.

அதேவேளை, தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறியது முதலாக பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதுடன் மேலும் இலட்சக்கணக்கான ஏக்கர் காணிகளை அழிப்பதற்கு திட்டமிடப்பட்டுவருகிறது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தன குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

காடுகளைப் பாதுகாப்பதற்காக கடந்த 2001 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந்த போது, 05/2001 என்ற இலக்க சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டது. 

எனினும், அதனை இல்லாமல் செய்திருக்கும் தற்போதைய அரசாங்கம், காடுகளை பெரும் நிறுவனங்களுக்கும் தமக்கு நெருக்கமானவர்களுக்கும் வழங்குகின்றது என்று குறிப்பிட்டிருக்கும் அவர், சூழலை வெகுவாக மாசடையச்செய்யும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால், எதிர்வரும் காலத்தில் நாடளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறார்.

எனவே, காடுகளை அழிப்பதைத் தவிர்ப்பதும் சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதும் தனிநபருடையதோ அல்லது ஒரு குழுவினருடையதோ நலனைக் கருத்திற்கொண்டதாக அமையாது. 

மாறாக அது ஒட்டுமொத்த சமூகத்தினதும் நலனை மையப்படுத்தியதாகும். 

காடழிப்பைத் தவிர்ப்பதன் ஊடாக இயற்கையின் சமநிலையை உயர்மட்டத்தில் பேணமுடியும் என்பதுடன் அதனூடாகவே நாமனைவரும் எமது நிலைத்திருப்பை உறுதிசெய்ய முடியும் என்பதை அனைவரும் புரிந்துகொண்டு செயலாற்றுவது அவசியமாகும்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right