வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் 'மாநாடு' படத்தில் நடிகர் சிலம்பரசன் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் என பன்முக திறமை பெற்றவரான வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'மாநாடு'. இந்த படத்தில் சிலம்பரசன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'ஹீரோ' பட புகழ் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். 

இவர்களுடன் இயக்குனர்கள் எஸ் ஏ சந்திரசேகர், எஸ்.ஜே சூர்யா,  பாரதிராஜா, நடிகர்கள் கருணாகரன், பிரேம்ஜி அமரன், உதயா, டேனியல் போப், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இப்படத்தில் சிலம்பரசன் அப்துல் ஹாலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அது தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. 

இதனால் நடிகர் சிலம்பரசன் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக விளக்கம் அளித்த படக்குழுவினர்,' சிலம்பரசன் அப்துல் காலிக் என்ற வேடத்தில் மட்டுமே நடிக்கிறார். இரண்டு வேடத்தில் தோன்றவில்லை' என்றனர். இந்நிலையில் இணையத்தில் இந்த செகண்ட் லுக் போஸ்டரும் வைரலாகி வருகிறது..