தமிழ்த் தேசிய அரசியலில் சாண், ஏற முழம் சறுக்கும் நிலைமைகள் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல், தமிழ்த் தேசியப் பரப்பில் ஐக்கிய அணியொன்றை உருவாக்குவதற்கான கற்பிதத்தினை வழங்கியுள்ளது. அதனடிப்படையில் ஐக்கியத்திற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. 

இந்தச் செயற்பாட்டில் ஈடுபடுவதால், தான் தலைமை தாங்கும் தமிழரசுக்கட்சி மற்றும் தனது கட்சி பிரதான அங்கத்துவம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றினுள் இரட்டை அழுத்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளார் மாவை.சோ.சேனாதிராஜா. 

சேனாதிராஜாவுக்கான அழுத்தங்களும் அவருடைய செயற்பாடுகளும் பற்றி ஏற்கனவே பார்த்தாகிவிட்ட நிலையில் அந்த நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான ‘பிரம்மாஸ்திரமும்’ அவர் கைகளில் தான் இருக்கின்றது. அதனை சேனாதிராஜா பயன்படுத்துவாரா இல்லையா என்பது அவருடைய தற்துணிவுக்குரிய விடயம்.

அவ்வாறிருக்க, உருவாகி வரும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் கூட்டு நிறுவன ரீதியாக செயற்படுவதற்கான கட்டமைப்பை தயாரிப்பதற்கு குழுவொன்று அமைக்கப்படுவதற்கும் கட்சித்தலைவர்கள் மட்டத்தில் அதுபற்றி பரந்துபட்ட கலந்துரையாடல்களைச் செய்வதற்கும் இணக்கப்பாடொன்று எட்டப்பட்டிருக்கின்றது. 

இந்த நிலைமையானது ஒருங்கிணைந்துள்ள கட்சிகள் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான திறவுகோலாக அமையலாம் என்ற எதிர்பார்ப்புக்கள் பலமாக ஏற்பட்டிருக்கையில் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டுக்கான ‘தலைவரை’ பரிந்துரைத்திருக்கிறார்.

விக்னேஸ்வரனின் தலைவருக்கான பரிந்துரை தற்போது உருவாகும் கூட்டுக்கு ‘கண்ணி வெடியாக’ மாறியிருக்கின்றது. ஒருங்கிணைந்துள்ள கட்சிகளில் ஒன்றான தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளராக இருப்பவர் விக்னேஸ்வரன். உருவாகும் கூட்டில் அவருக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கின்றது. 

அத்தகையவொருவர், தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டு உறுதியாவதற்கு முன்னதாகவே அதன் பதவிநிலைகள் சம்பந்தமான விடயத்தினை ஏன் கையிலெடுத்தார். அதிலும் குறிப்பாக உருவாகும் கூட்டின் ‘தலைவர்’ பதவியை நோக்கி தனது நிலைப்பாடடை ஏன் திடீரென வெளிப்படுத்தினார் என்பன அடுத்தடுத்து எழும் வினாக்கள். 

தற்போது, உருவாகும் கூட்டின் தலைவர் பதவிக்கு சிரே~;ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தாவை பரிந்துரைத்திருக்கின்றார் விக்னேஸ்வரன். சட்டத்துறையில் ஸ்ரீகாந்தா கொண்டிருக்கும் அனுபவங்களையும், அவரிடமுள்ள இதர தனித்துவ குணாம்சங்களையும் காரணமும் காட்டியிருக்கின்றார். 

அதுமட்டுமன்றி சேனாதிராஜாவுடன் ஸ்ரீகாந்தாவை ஒப்பீடு செய்துள்ள விக்னேஸ்வரன், கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சியின் ‘ஏதேச்சதிகார’ போக்கினையும் சுட்டிக்காட்டி தனது முன்மொழிவை மேலும் வலிதாக்கியிருக்கின்றார். சட்டத்துறையின் உச்சத்தில் இருந்தவரல்லவா விக்னேஸ்வரன், தனது கருத்தை வலுவாக்கும் காரணங்களை யாரும் மறுதலிக்காதவாறு திரட்சியாக முன்வைத்திருப்பதையிட்டு ஆச்சரியம் கொள்ளத் தேவையில்லை. 

ஆனால், திடீரென ஸ்ரீகாந்தாவை ‘தலைவராக’ முன்மொழிந்தால் ஏற்படும் ‘அக, புற’ குழப்பங்கள், உருவாகி வரும் கூட்டுக்கு வினையாக வரக்கூடிய ஆபத்துப்பற்றி விக்னேஸ்வரன் ஒருநொடியாவது உணர்வு ரீதியாக சிந்தித்திருக்கவில்லை என்பது தான் வேதனைக்குரியது.

இங்கு ஸ்ரீகாந்தாவோ அல்லது வேறொருவரோ தலைவர் பதவிக்கு வரக்கூடாது என்பது விடயமல்ல. அதேநேரம், ஸ்ரீகாந்தா மூன்று தசாப்பதத்திற்கும் அதிகமான துறைசார் அனுபவம் கொண்டவர். தமிழ் இளைஞர் பேரவையில் இருந்து இன்று வரையில் செயற்பட்டாளராக இருப்பவர். தற்போது தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர். தமிழ்த் தேசியத்தில் பற்றுமிக்கவர். அவ்விதமானவர் தலைவர் பதவியை வகிப்பதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. 

ஆனால், விக்னேஸ்வரன் உத்தியோக பூர்வமாக தனது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு முன்னதாக நடைபெற்ற பங்காளிக்கட்சிகளின் கூட்டமொன்றின்போது உருவாகும் கூட்டுக்கு ஸ்ரீகாந்தாவை நியமிப்பது பற்றி ஊடக நேர்காணலில் தான் பிரஸ்தாபித்தமை குறித்து கருத்துப்பகிர்ந்திருக்கின்றார். 

அச்சமயத்தில் ‘என் உயரம் எனக்குத் தெரியும்’ என்று ஸ்ரீகாந்தாவே பதிலளித்திருக்கின்றார். தன்னை முன்மொழிந்து உருவாகிவரும் ஐக்கியத்தில்’  கை வைத்துவிடாதீர்கள் என்று பொருள்படவும் சுட்டுரைத்திருக்கின்றார். அதன்போது, விக்னேஸ்வரன் புன்னகையுடன் இருந்திருக்கின்றார். 

ஸ்ரீகாந்தாவின் ‘உட்கிடக்கையை’ உணர்ந்தும் விக்னேஸ்வரன் அவரை பரிந்துரைத்திருக்கின்றார்  என்றால் அதற்கு பின்னணிகள் ஏதுமில்லை என்று இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது. குறிப்பாக, சேனாதிராஜாவுடன் ஸ்ரீகாந்தாவை ஒப்பீடு செய்திருப்பதன் மூலம் சேனாதிராஜா உருவாகும் கூட்டின் ‘தலைவர்’ பதவிக்கு வந்து விடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளமை வெளிப்பட்டிருக்கின்றது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் ஏறக்குறைய மூன்றரை வருடங்கள் அவருக்கு கிடைத்த பட்டறிவே காரணமாக இருக்கின்றது. 

அடுத்து, போரால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் குரலாக உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் விடயங்களை கையாளவல்ல சட்ட அறிவுள்ள ஒருவர் என்ற நியாயமான அர்த்தங்கற்பித்தலுடன் சம்பந்தனால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் விக்னேஸ்வரன். பங்காளிக்கட்சிகள் முழுவிருப்படையாதபோதும் சேனாதிராஜாவின் பின்வாங்கல் விக்னேஸ்வரனின் அரசியல் பிரவேசத்திற்கு வழிவகுத்திருந்தது. 

பின்னாளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கைவழி தவறிய செல்நெறியால் உட்கட்சிப் போராட்டம் நடத்தினார் விக்னேஸ்வரன். ஈற்றில் அவர் முரண்பட்டு வெளியேறினார். தன் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்காக அரசியலை தவிர்க்க முடியாது நீட்சிபெற வேண்டிய நிலைத்தள்ளப்பட்டார். கடந்த பாராளுமன்ற தேர்தல் நிறைவடையும் வரையில் தமிழர்களின் ‘மாற்றுத் தலைமை’ என்ற பிம்பத்தையும் அவரே கொண்டிருந்தார்.   

வடக்கு மாகாண சபை தேர்தலில் விக்னேஸ்வரன் ஒரு இலட்சத்து 32ஆயிரத்து 255வாக்குகளைப் பெற்றவர். ஆனால் ஏழு ஆண்டுகளில் அதேமண்ணில் 21ஆயிரத்து 554வாக்குகளையே அவரால் பெறமுடிந்திருக்கின்றது. கூட்டமைப்புக்கு வெளியில் அவரின் அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்து சொற்பகாலமாக இருந்தாலும் வாக்குவங்கியில் காணப்பட்ட சரிவு அவர் நிலையை உணர்த்தியிருந்தது.

தன்னிலை உணர்ந்ததாலோ என்னமோ உருவாகும் கூட்டின் ‘தலைவர்’ என்ற பந்து தன்னை நோக்கி வருவதற்கு முன்னரே ஸ்ரீகாந்தாவை முன்மொழிந்து அதனை தட்டி தவிர்த்துவிட்டிருக்கின்றார் போலும்;. எது எவ்வாறாயினும், தற்போது உருவாகிவரும் கூட்டு நிலைபெற வேண்டுமாக இருந்தால் பதவி நிலைகள் பற்றிய பகிரங்க வெளிப்பாடுகளும் கருத்தாடல்களும் அவசியமற்றவையே. 

உருவாகும் கூட்டில் பதவிநிலைகளால் ஏற்படும் குழப்பங்கள், தமிழ்த் தலைவர்கள் என்றுமே ஒற்றுமைப்பட மாட்டார்களென சிந்தித்துக் கொண்டிருக்கும் சதாரண மக்கள் மத்தியிலும் வெகுவான தாக்கத்தினை ஏற்படுத்தும். அத்துடன், தென்னிலங்கைக்கும் அது தீனிபோடுவதாகவும், பூகோள அரசியலிலும் தமிழர்கள் சார்ந்த கரிசனை சலிப்படையச் செய்வதற்கும் வழியமைத்துவிடும் ஆபத்துக்களும் இல்லாமலில்லை. 

ஏற்கனவே அழுத்தங்களுக்குள் செயற்பட்டுக்கொண்டுக்கும் சேனாதிராஜாவின் அணியினரை அவரது கட்சிக்குள்ளும், கூட்டமைப்பிற்குள்ளும் இருப்பவர்கள் இலகுவாக திசை திருப்பி விடவும் வழிவகுத்துவிடலாம். 

மேலும், தமிழ்த் தேசியப் பரப்பு என்ற பரந்துபட்ட தளமொன்றில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து ‘கூட்டு’ அமைக்கும் போது அதற்கு தலைவர் என்ற பதவி நிலையைத் தாண்டி இவ்விதமான கூட்டுக்கு ‘தலைமைத்துவ சபை’ அல்லது ‘கூட்டுத்தலைவர்(மை)கள்’ என்ற கட்டமைப்பைக் கூட ஏற்படுத்த முடியும்.

தமிழ்த் தேசியப் பரப்பில் தலைமைத்துவ சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. இதனால் ‘தலைவருக்கான’ வெறுமை இருக்கின்றது. ஆயினும் தலைவர்கள் சுட்டுவிரல்களால் காண்பிக்கப்பட்டோ, முதிர்வுகளின் உதிர்வுகளாலோ உருவாக்கப்படுவதில்லை. 

காற்று இடைவெளிகளை நிரப்புவதுபோல் வெகுஜனவர்க்கம் தனது தலைவர் வெற்றிடத்தினையும் விட்டு வைக்காது. 2017இற்குப் பின்னர் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அணுகுவதற்கு விக்னேஸ்வரன் மிகப் பொருத்தமாக இருப்பார் என்று அவரது பிரதிபலிப்புக்கள் வெளிப்படுத்தியிருந்தன. 

அதுவே தமிழ்த் தேசிய அரசியலில் தற்போது வரையில் தவிர்க்க முடியாத ஒருவர் என்ற பாத்திரத்தை விக்னேஸ்வரன் பெறுவதற்கு காரணமாகியது. இந்நிலையில்  “மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது” என்ற வாக்கை மட்டுமே அவருக்கு இப்போது நினைவுபடுத்திச் செல்லமுடியும்.

-ஆர்.ராம்-