புத்தளம், பாலாவி பகுதியில் மஞ்சளை கடத்துவதற்கு தயாராகிக்கொண்டிருந்த இருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த இருவரும் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருடன் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து புத்தளம் அனுராதபுர வீதியில் அமைந்திருக்கும் அரிசி ஆலையொன்றில் மேற்கொண்ட  தேடுதலில், கெப் ரக வாகனத்தில் கொண்டு செல்ல தயாராகவிருந்த 8 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 231 கிலோ உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டது.

இவ்வாறு மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் கற்பிட்டி பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்ததாக பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.  

இதன்போது கைதுசெய்யப்பட்ட இருவரும் புத்தளம், மற்றும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட  மஞ்சளுடன் இரு சந்தேக நபர்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.