(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை ஏற்பட்டதன் பின்னர் கொழும்பு மாவட்டத்தில்மாத்திரம் 12,248 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கொழும்பு மாவட்ட செயலகத்திற்கு 2 பில்லியனுக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் பிரதீப் யசரன்ன தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்கிழமைஅரசாங்க தகவல் திணைக்களத்திலிருந்து இணையவழியூடாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

கொழும்பு மாநகசபையை அண்மித்த பகுதிகளிலேயே தற்போது கொவிட் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் இலங்கையில் முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டதிலிருந்து 67 நாட்கள் கொழும்பு முழுமையாக முடக்கப்பட்டிருந்தது.

தற்போது ஒக்டோபர் மாதம் இரண்டாவது அலை ஏற்பட்டதன் பின்னர் 12, 248 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளஅனைத்து குடும்பங்களுக்கும் 10, 000 பெறுமதியான உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக 110 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் இதுவரையில் 13 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.இவற்றில் திம்பிரிகஸ்ஸாய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 3 தொடர்மாடி குடியிருப்புக்களும் கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 5 தொடர்மாடி குடியிருப்புக்களும் உள்ளடங்குகின்றன. 

அத்தோடு மொரட்டுவை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தொடர்மாடி குடியிருப்பொன்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொடர்மாடி குடியிருப்புக்களில் 8,486 குடும்பங்கள் வாழ்கின்றன.

இவற்றை மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்றாளர் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2 பில்லியனுக்கும் அதிக நிதி கொழும்பு மாவட்டத்திற்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.