(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

அரச சேவை ஆணைக்குழுவின் நியமனங்கள் தொடர்பான  அதிகாரங்கள் ஜனாதிபதிக்கே உள்ளன. அதுதொடர்பில் சபையில் கதைக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்ன தலைமையில் கூடிய போது, அரச சேவை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் மனுஷ நாணயக்காரவினால் எழுப்பப்பட்ட ஒழுங்குப் பிரச்சினைக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.

மனுஷ நாணயக்கார எம்.பி ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து தெரிவிக்கையில்,

அரச சேவை ஆணைக்குழுவிற்கான நியமனங்கள் தொடர்பான பெயர் விபரங்கள் பாராளுமன்றம் ஊடாக அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கின்றது. அந்தப் பெயர்களில் நாட்டில் வியாபாரத்துடன் தொடர்புடைய பரிசோதனை உபகரணங்களை கொண்டு வருவதற்கான மனுக்கோரலை மேற்கொண்டுள்ள நிறுவனமொன்றின் உரிமையாளர் ஒருவரின் பெயர் உள்ளது.

இவ்வாறானவர்களை அரச சேவை ஆணைக்குழுவுக்கு நியமிக்கும் போது அரச அதிகாரிகளுக்கு ஏதேனும் அழுத்தங்கள் ஏற்படாது என்று எங்களுக்கு கூற முடியாது என்றார்.

இதன்போது குறுக்கிட்ட சபாநாயர், ஆணைக்குழு தொடர்பாக சபையில் கதைக்க முடியாது. இது சபையில் கதைக்க வேண்டிய விடயம் அல்ல. தயவு செய்வு அதனை நிறுத்துங்கள் என்றார்.

அதனைத்தொடர்ந்து ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த எதிர்க்கட்சி உறுப்பினர்  எஸ்.எம்.மரிக்கார் தெரிவிக்கையில், அரச ஔடதங்கள் ஒழுங்குப்படுத்தல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக 5 இலட்சம் ரெபிட் எச்.ஐ.வி. பரிசோதனை உபகரணங்களை கொண்டு வருவதற்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்று இடம்பெறுகின்றது என தெரிவித்துக்கொண்டிருக்கையில், சபாநாயகர் குறுக்கிட்டு  உங்களின் கருத்தை புரிந்துகொண்டோம். உங்களுக்கு அது தொடர்பாக பேச முடியாது என்று மீண்டும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து தனது கருத்தை மனுஷ நாணயக்கார எம்.பி, தெரிவிக்கையில், அரச சேவை ஆணைக்குழு தொடர்பாக எப்படி இந்த பாராளுமன்றத்தில் கேட்க முடியாது என்று கூற முடியும் என்றார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், அது பற்றி பேசும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. அதனை நியமிக்கும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது என்றார்.