(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

உள்நாட்டலுவல்கள் அமைச்சை பாதுகாப்பு அமைச்சுக்கு கீழ் கொண்டுவந்திருப்பது சிவில் நிர்வாக சேவைக்கு பாரிய அச்சுறுத்தலாகும். வரலாற்றில் முதல்தடவையாகவே இது இடம்பெற்றிருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் சிவில் நிர்வாக சேவை சுதந்திரமாக இயங்கவும் பொது மக்கள் தங்களது பணிகளை அச்சமின்றி மேற்கொள்ளவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தனி அமைச்சாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் வரலாற்றில் முதல்தடவையாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு பாதுகாப்பு அமைச்சுக்கு கீழ் கொண்டுவந்திருக்கின்றது. இது சிவில் நடவடிக்கைகளுக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.

அத்துடன் இந்த அமைச்சை பாதுகாப்பு அமைச்சுக்கு கீழ் கொண்டுவந்திருப்பதன் மூலம் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களாக இராணுவத்தினரை நியமிப்பதற்கான திட்டம் இருக்கின்றதாக தெரியவருகின்றது. இவ்வாறா சிவில் நிர்வாக சேவையை பாதுகாப்பது என கேட்கின்றேன். 

அதேபோன்று அரச காணிகளை எமது அரசாங்க காலத்தில் விற்பனை செய்ததாக அரச தரப்பினர் தெரிவித்தனர். எமது காலத்தில் விற்பனை செய்த ஒரு அரச காணியை முடியுமானால் தெரிவிக்கட்டும். ஆனால் கொழும்பில் ராணுவ தலைமையகத்தை சங்கிரில்லாவுக்கு விற்பனை செய்தது, கொழும்பு துறைமுகத்தில் 50 ஏக்கர் காணியை சீனாவுக்கு உரித்துரிமையாக வழங்கியது, மொனராகலை மாவட்டத்தில் 7ஆயிரம் ஏக்கர் காணியை டோல் நிறுவனத்துக்கு வழங்கியமை, தற்போது ஆட்சிக்கு வந்ததுடன் சங்கிரில்லாவுக்கு பக்கத்தில் இருக்கும் 3ஏக்கர் காணியை சங்கிரில்லாவுக்கு விற்பனைசெய்துள்ளார்கள்.

மேலும்  நாட்டின் பாதுகாப்பு, புலனாய்வு பிரிவு  செயலிழந்திருந்ததாக குற்றம் சாட்டுகின்றனர். தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய் துறைக்கு பொறுப்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இருந்தார். தற்போது அவர் உங்கள் பக்கத்திலே இருக்கின்றார். 

அதேபோன்று நிதிகுற்றப்புலனாய் விசாரணை பிரிவு எமது அரசாங்க காலத்தில் முறையாக செயற்படவில்லை. அது சரியாக செயற்பட்டிருந்தால் அரசாங்கத்தில் இருக்கும் அதிகமானவர்கள் இன்று சிறையில் இருப்பார்கள். எமது அரசாங்கமும் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்திருக்கும் என்றார்