• இன்று  இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்
  • வத்தளையில் தொழிலாளர் வீட்டுத்திட்டமொன்றில் தொற்று
  • சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கற் பிரிவிலும் தொற்று
  • கொழும்பில் மாத்திரம் 7000 தொற்றாளர்கள் 

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்த போக்கிலேயே செல்கிறது. நாளொன்றுக்கு இனங்காணப்படும் தொற்றாளர்களில் பெருமளவானோர் மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்படுகின்றனர்.

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலேயே இவ்வாறு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். 

நாட்டில் கொவிட் பரவலில் 2 ஆம் அலை ஏற்பட்டதன் பின்னர் கொழும்பில் மாத்திரம் 7022 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதே வேளை ஏனைய மாவட்டங்களிலும் மிகக் குறைந்தளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

அத்தோடு சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கற் பிரிவின் ஊழியர்கள் சிலருக்கு தொற்றுறுதியாகியுள்ள நிலையில் வெவ்வேறு மாகாணங்களிலுமுள்ள வைத்தியசாலைகளிலும் தொற்று அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று  இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இன்று  செவ்வாய்கிழமை இரவு 10 மணி வரை 459 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,967 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 14 962 பேர் குணமடைந்துள்ளதோடு, 5,915 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றைய தினம் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 17, 436 ஆக உயர்வடைந்துள்ளது. 

வத்தளையில் தொழிலாளர் வீட்டுத்திட்டமொன்றில் தொற்று

வத்தளையிலுள்ள தொழிலாளர் குடியிருப்பொன்றில் 35 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து வத்தளை , பல்பிட்டி வீதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

கொழும்பில் மாத்திரம் 7000 தொற்றாளர்கள் 

நேற்று திங்கட்கிழமை இனங்காணப்பட்ட 337 தொற்றாளர்களில் 189 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அதற்கமைய நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலையில் கொழும்பு மாவட்டத்தில் 7022 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

சுகாதார மருத்துவ வழங்கற் பிரிவிலும் தொற்று

சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கற் பிரிவின் ஊழியர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருந்து விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

நாடளாவிய ரீதியில் வெவ்வேறு வைத்தியசாலைகளுக்கு மருந்துகள் மற்றும் மருத்து உபகரணங்களை பகிர்ந்தளிக்கும் பிரிவிலுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் திங்களன்று பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மருந்து விநியோகத்தில் ஈடுகின்ற சுமார் 50 வாகனங்களிலும் சேவையாற்றுபவர்கள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த பிரிவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் வேறு மாகாணங்களிலுள்ள வைத்தியசாலைகளிலும் தொற்று அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.