யாழ்ப்பாணம் மாநகர், கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

 

திருமுருகண்டியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 48 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

யாழ்ப்பாணம் நகரில் கே.கே.எஸ் வீதியில் இயங்கும் பிரபல சைவ உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை இரவு உறக்கத்துக்குச் சென்ற நிலையில் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவரது உயிரிழப்புக்கு மாரடைப்புக் காரணம் என்று சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் குறித்த இறப்பு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். 

இந்நிலையில், சடலம் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை, 3 நாள்களுக்கு முன் அவர் குறித்த உணவகத்திற்கு பணிக்காக வந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

எனினும் தற்போது இறப்புக்கான காரணம் மாரடைப்பு என உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.