( எம்.எப்.எம்.பஸீர்)

அரசியல் செயற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோரை கடந்த 2011 ஆம் ஆண்டு கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய விவகாரம் தொடர்பில், யாழ். நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் ஆட்கொணர்வு மனு விசாரணைகளில் சாட்சி வழங்குவதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த அறிவித்தலை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செல்லுபடியற்றதாக்கி தீர்ப்பளித்தது.

மேன் முறையீட்டு நீதிமன்றின்  தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சோபித்த ராஜகருணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமே இந்த தீர்ப்பை வழங்கியது.

பாதுகாப்பு காரணங்களால் காரணமாக தன்னால் யாழ்ப்பாணத்துக்கு செல்ல முடியாது எனவும், அழைப்பாணையை இரத்து செய்யவும் கோரி, கோத்தாபய ராஜபக்ஷ சார்பில் மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.  

இந்த மனு மீதான விசாரணையின்போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில்,  ஹபயாஸ் கோப்பர்ஸ் என அறியப்படும் ஆட்கொணர்வு மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்,  அது குறித்த சாட்சி விசாரணைகள் யாழ். நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.

அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 27  ஆம் திகதி, குறித்த விவகாரத்தில் சாட்சியமளிக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.