(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம் தமக்கு எதிராக விமர்சனக் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாது ஊடகங்களை அடக்கி, ஊடகவியலாளர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது எனவும் இந்த ஆட்சியில் இப்போது வரையில் அண்ணளவாக 200 சமூக ஊடகவியலாளர்கள் அல்லது சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

சமூக ஊடகங்கள் செயற்படும் விதம் குறித்து அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் கடந்த காலங்களில் பாரிய கலந்துரையாடல் ஒன்று சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. தற்போதும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் குறித்து குற்றப்புலனாய்வுத்துறை கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. 

இந்த நாட்டு மக்களின் கருத்து சுதந்திரம், தகவல் பரிமாற்றம் உரிமைகளுக்கு இடமுண்டு என இலங்கையின் அரசியல் அமைப்பு தெளிவாக உறுதிப்படுத்துகின்றது. எனவே அரசாங்கம் மீதான மக்களின் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள். 

சமூக ஊடகங்களில் முன்வைக்கம் விமர்சனங்கள் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமென கூறி அவர்களின் பின்னால் விரட்ட வேண்டாம். சமூக ஊடகங்களில் பதியப்படும் விமர்சனக் கருத்துக்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

ஒரு சிலரின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களுக்கு இவ்வாறான தண்டனைகளை வழங்குவோம் எனவும் கூறுகின்றார். பொலிஸ்மா அதிபருக்கு எவரையும் தண்டிக்க முடியாது, இது நீதிமன்றம் செய்யவேண்டிய காரியமாகும்.

இப்போது வரையில் 200ற்கு அதிகமான சமூக ஊடகவியலாளர்கள் அல்லது செயற்பாட்டாளர்கள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் யுரேகா டி சில்வா எனும் ஊடகவியலாளர் தற்போது மெல்பேர்னில் வசித்து வருகின்றார். அவர் இலங்கையில் பிரபல ஊடகங்களில் பணியாற்றிய ஒரு  ஊடகவியலாளர், அவர் முகப்புத்தகத்தில் ஒருவர் இட்ட பதிவை பகிர்ந்தார் என்பதற்காக அவர் இலங்கைக்கு வந்தால் விமானநிலையத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என குடிவரவு -குடியகல்வு திணைக்களத்திற்கு பணிக்கப்பட்டுள்ளது. 

இவையெல்லாம் மிகவும் மோசமான செயற்பாடுகளாகும். ஊடக சுதந்திரத்தை அழிக்கவோ ஊடகவியலாளர்களை ஒடுக்கவோ, கட்டுப்படுத்தவோ நடவடிக்கை எடுக்க வேண்டாம். இதனை விடவும் முக்கியமான பிரச்சினைகள் நாட்டில் உள்ளது, அதற்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்தது  ஊடக சுதந்திரத்தை அழிக்க வேண்டாம் என்றார்.