அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன், வெளியுறவுத் துறை உட்பட தனது அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்களின் பெயர்ப்பட்டியலை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்று முடிந்த தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பின் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். 

ஜோ பைடன் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார். 

இதற்கிடையே, ஜோ பைடன் தனது தலைமையில் அமையவிருக்கும் புதிய அமைச்சரவை குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இன்று வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதன்படி,  வெளியுறவுத் துறை அமச்சராக அன்டனி பிளின்கென்னையும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக  தனது மூத்த ஆலோசகர்களில் ஒருவரான ஜாக் சல்லினையும், முன்னாள் அமெரிக்க தலைமை தூதர் ஜோன் கெரியை தனது சிறப்பு தூதராகவும்,  அலெஜான்ட்ரோ மயோர்காசை  உள்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் தெரிவு செய்துள்ளார்.

இதேவேளை முன்னாள் துணை சி.ஐ.ஏ. இயக்குநரான அவ்ரில் ஹைன்ஷை  தேசிய புலனாய்வு இயக்குநராக அவர் தெரிவு செய்துள்ளார்.