Published by R. Kalaichelvan on 2020-11-24 15:11:02
(நா.தனுஜா)
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவுத்திட்டம், பிரதமர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களைக் கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.

புத்திஜீவிகளும் வினைத்திறனுடன் செயற்படக்கூடியவர்களும் இந்த அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது என்பதே மக்களின் பொதுவான அபிப்பிராயம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் வெகுவாக அதிகரித்துவரும் நிலையில், கொழும்புவாழ் மக்கள் மிகுந்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
ஏனைய பிரதேசங்களில் வாழும் மக்களைப்போன்று உணவைப் பெற்றுக்கொள்வதற்கு மாற்றுவழிகளைத் தேடிக்கொள்வதற்கான வாய்ப்பு கொழும்பு நகரத்தில் வாழும் மக்களுக்கு இல்லை. அந்த மக்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபாய் பணம் ஒரு வாரத்தில் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் விமல் வீரவன்ச குறைகூறுகின்றார்.
உண்மையில் அந்தப் பணத்தைப் பயன்படுத்தி குடும்பமொன்று ஒருமாதம் வரையில் அதன் உணவுத்தேவையைப் பூர்த்திசெய்ய முடியாது.
அடுத்ததாக நேற்று பாடசாலைகள் மீளத்திறக்கப்பட்டன. எனினும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே பாடசாலைகளுக்கு சமுகமளித்திருந்தனர்.
பாடசாலைகளைத் திறப்பதால் மாணவர்களின் சுகாதாரப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்று சுகாதார அமைச்சின் செயலாளர் கூறும் அதேவேளை, பாடசாலைகள் திறக்கப்படுகின்றன. முதலில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் குறைந்தபட்ச சுகாதாரப்பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.