Published by R. Kalaichelvan on 2020-11-24 14:57:30
(க.பிரசன்னா)
கொரோனா தொற்றுக் காலப்பகுதியில் நாட்டில் இணையவழியின் மூலம் முன்னெடுக்கப்பட்ட கல்வி நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாகவும் தொலைக்காட்சி கல்வி ஒளிபரப்பு ஓரளவுக்கு சாத்தியமடைந்துள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ளதாவது,
பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைய வசதிகளை பெற்றிருக்கவில்லை. அத்துடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொலைபேசி அலைக்கற்றைகளின் வீச்சு மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது.
மேலும் தொடர்புகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற தரவுப் பொதிகள் போதுமானவையாக இல்லையென்பதுடன் விலையுயர்ந்ததுமாகும். கிழக்கு மாகாணத்தில் 30 சதவீத மக்களும் மேல் மாகாணத்தில் 50 சதவீத மக்களும் ஏனைய மாகாணங்களில் 20 - 40 சதவீத மக்களே இணைய வசதிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை இணையவழிக்கல்வி மாணவர்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கையடக்கத் தொலைபேசிகள், கணினிகள் போன்றவற்றுக்கு அடிமையாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் கொரோனா தொற்று நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை தொலைக்காட்சி அலைவரிசைகளினூடாக பாடங்களை நடத்துவதே சிறந்த தொலைதூர கல்வித் தளமாகுமெனவும் தெரிவித்துள்ளார்.