நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக நிலங்கள் சுவீகரிக்கப்படும்போது அவற்றுக்கான நஷ்டஈடு குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட முன்னர் வழங்கப்பட வேண்டும் என நீர்ப்பாசன அமைச்சரும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டு விவகாரம் மற்றும் அனர்த்த முகாமைத்துவஇராஜங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் நேற்று (23.11.2020) நடைபெற்ற நீர்ப்பாசனம் தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக் குழுவில் தெரிவித்தார்.

நிலங்களை இழக்கும் பொது மக்களின் திருப்தி தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், நீதி கிடைக்கக்கூடிய வகையில் மக்களுக்கு தொடர்ந்து இழப்பீடு வழங்குவதன் மூலம் இத்திட்டத்திற்கு அவர்களின் ஆசீர்வாதம் பெறப்பட வேண்டும் என்றும் கூறினார். இதற்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தினார்.

உமா ஓயா பல்நோக்கு நீர் திட்டத்தினால் காணிகளை இழந்த 6000 குடும்பங்களுக்கு மாத்திரம் இன்னமும் நஷ்டஈடு கிடைக்காமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரோ, இங்கு அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்தபோது அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். உமா ஓயா பல்நோக்கு நீர் அபிவிருத்தித் திட்டத்தின் முழுமையான பணிகள் அடுத்தவருடம் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என்றும், இதற்கமைய இந்த முதலீட்டில் அரசாங்கத்துக்கு நன்மை கிடைக்கும் முக்கிய அங்கமான மின்சார உற்பத்தியின் ஊடாக 120 மெகாவட் மின்சாரத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் தேசிய கட்டமைப்பில் இணைக்க எதிர்பார்த்திருப்பதாகவும் இங்கு தெரியவந்தது.

அத்துடன் இதற்கு அவசியமான சகல ஒதுக்கீடுகளும் வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதும் 355 குளங்களுக்கு அவசியமான நீரை வழங்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார். ஆறு வருடங்களில் பூர்த்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள 1200 சிறிய குளங்களை போஷனையூட்டும் வகையில் 26 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை மற்றும் 94 கிலோமீட்டர் நீளமான வடமத்திய பிரதான கால்வாய் திட்டத்தை நான்கு வருடங்களில் பூர்த்திசெய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக திரு.திஸாநாயக்க குறிப்பிட்டார். இவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு இவ்வருட வரவுசெலவுத்திடடத்தில் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் காலதாமதம் அடைந்திருக்கும் பல திட்டங்களை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐந்து வருடங்களாக தடைப்பட்டுள்ள சந்திரிகா வாவி ஊடாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள கைத்தொழில் வலயத்துக்கு நீரை விநியோகிக்கும் ஜின் மற்றும் நில்வளா திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு 2026-2027 ஆண்டாகும்போது அவற்றைப் பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுப்பது பற்றியும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 450 மில்லியன் கன அடி நீரைக் கொண்டுசெல்லும் இந்தத் திட்டத்தின் ஊடாக ஹம்பாந்தோட்டை, எம்பிலிப்பிட்டிய பிரதேசங்கள் பலவற்றுக்கு நீர் விநியோகிக்கப்படவுள்ளது. அத்துடன், மன்னார் உள்ளடங்களான பல பகுதிகளில் காணப்படும் நீர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு கீழ் மல்வத்து ஓயா நீர் திட்டத்தை விரைவில் பூர்த்திசெய்யவிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

குளங்கள் உள்ளடங்கலாக நீர்ப்பாசன கட்டமைப்புக்கள் பல இராணுவத்தினர் மற்றும் தன்னார்வ அமைப்புகளைப் பயன்படுத்தி புனரமைக்கப்பட்டு வருவதுடன், அவற்றைப் பழுதுபார்க்கும் பணிகள் விரைவுபடுத்தப்படுவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் இங்கு வலியுறுத்தினார். அத்துடன் வடக்கில் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புதிய தொழில்நுட்பமுறை பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இது மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ஏராளமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தங்கள் பகுதிகளில் தற்போதுள்ள நீர்ப்பாசன முறைகளின் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து அமைச்சரின் கவனத்தை ஈர்த்ததுடன், அவற்றை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பான அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர், அநுராத ஜயரட்ன, மஹாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புக்கள் பொது உட்கட்டடமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், நாளக பண்டார கோட்டேகொட, நிமல் பியதிஸ்ஸ, சிவஞானம் சிறிதரன், கலாநிதி சுரேன் ராகவன், உதயன கிரிந்திகொட, எஸ்.எம்.எம்.முஷாரப், மர்ஜான் பலீல், சாணக்கியன் ராசமாணிக்கம் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.