(இராஜதுரை ஹஷான்)

மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பாடசாலைகளை  மீள ஆரம்பிப்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நெருக்கடியான சூழ்நிலையில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளை தொடர்ந்து மூடி வைப்பதால், மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பிரதேசங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளில் பாடசாலைகள்  மீள ஆரம்பிக்கப்பட்டன.

ஒரு சில பாடசாலைகளில்  குறைப்பாடுகள் காணப்படுகின்றன. குறைப்பாடுகளுக்கு தீர்வு காணும்  வரை பாடசாலைகளை  மூடி வைக்க முடியுமா? பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டது குறித்து  பல தரப்பினர் பலவிதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள்.

அரசியல் காரணிகளை கொண்டு முன்வைக்கும்  குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்க முடியாது. அதற்கு கவனம் செலுத்த வேண்டிய அவசியமும் கிடையாது. மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலைகளை தொடர்ந்து கண்காணிக்க சுகாதார பரிசோதகர்கள் தொடர்ந்து சேவையில் ஈடுப்படுத்தப்படுவார்கள்.

மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பாடசாலை மீள ஆரம்பிப்பது  குறித்து  விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.