(செ.தேன்மொழி)

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி செயற்படுகின்றன.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இத்தகைய செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கொழும்பு,கம்பஹா மாவட்டங்களில் 18 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  நேற்று மாத்திரம் 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையிலும் 527 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் எதிராக தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கமைய சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

மேல்மாகாணத்தை தவிர ஏனைய பகுதிகளில் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களில் தனிமைப்படுத்தல சட்டவிதிகளை முறையாக பின்பற்றப்படுகின்றதா? என்று நாம் ஆராய்ந்து பார்த்தப்போது, பெருமளவான வாகனங்கள் அந்த சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய செயற்பாடுகளினால் மாணவர்கள் பெரிதும் பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என்பதினால்,வாகன சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர் கள் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.