(நா.தனுஜா)


பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று அறிந்து கொண்ட போதிலும், கட்சியின் மீது கொண்டிருந்த பற்றினால் நாம் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டோம் என அக்கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நானும் பாலித ரங்கே பண்டார, பாலித தெவரப்பெரும ஆகியோரும் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு விரும்பியிருக்கவில்லை.

எமது கட்சி ஆட்சியிலிருந்த காலப்பகுதியிலும் கட்சி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியவில்லை என்ற அதிருப்தியிலேயே இருந்தோம். நாங்கள் நினைத்திருந்தால் சஜித் பிரேமதாஸவுடன் கைகோர்த்து, எவ்வித சிக்கல்களுமின்றி பாராளுமன்றத்திற்குச் சென்றிருக்க முடியும்.

ஆனால் பொதுத்தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதை நன்கறிந்திருந்தும் கட்சியின் மீதுள்ள பற்றினால் தேர்தலில் போட்டியிட்டோம்.எமது கட்சியின் செயற்பாடுகளில் எத்தகைய குறைபாடுகள் காணப்பட்டன. அவற்றை மீண்டும் சீராக்குவது எவ்வாறு, அதற்கு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பது போன்ற விடயங்கள் பிரதேச ரீதியில் செயற்படும் கட்சி அமைப்பாளர்களுக்கே நன்கு தெரியும். ஆகவே அனைத்துத் தரப்பினரதும் ஆலோசனைகளைப்பெற்று கட்சியை வலுப்படுத்துவதே எமது நோக்கமாகும்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் ஜனாதிபதித்தேர்தலில் வெற்றிபெற்று தேசிய அரசாங்கமொன்றை அமைத்தோம். அரசாங்கம் அமைத்ததன் பின்னர் நாம் கட்சி ஆதரவாளர்களை மறந்துவிட்டோம்.

பலவருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்களுக்கு நீதிபெற்றுக்கொடுக்கப்படும். கௌரவமாக வாழமுடியும் என்று கட்சியின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்தார்கள். எனினும் நாம் ஆட்சியிலிருந்த காலப்பகுதியில் எம்மால் இழைக்கப்பட்ட தவறுகளின் காரணமாக கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் காணப்பட்ட எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் சீர்குலைந்துபோய்விட்டது.

அவர்கள் எம்மீதுகொண்ட அதிருப்தியின் காரணமாகவே கடந்த தேர்தல்களில் எமக்கெதிரான பிரதிபலிப்பை வெளிக்காட்டினார்கள். அதன்மூலம் கட்சியின் ஆதரவாளர்கள் எமக்கு சிறந்த பாடமொன்றைப் புகட்டினார்கள்.

அதனூடாக எதிர்காலத்தில் அந்தத் தவறுகள் இடம்பெறாமல் தடுக்கும் அதேவேளை, எமது கட்சியைப் பாதுகாப்பதற்குத் தோற்கொடுத்த ஆதரவாளர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதும் அவசியமாகும். அதேபோன்று கட்சி ஆதரவாளர்கள் விரும்பும்வகையில் கட்சியை வலுப்படுத்த வேண்டும். அன்றேல் நாம் முன்நோக்கிச்செல்ல முடியாது.

 பொதுத்தேர்தலில் எம்மால் வெற்றிபெறமுடியாது என்பதை நாம் அறிந்திருந்தோம். எனினும் கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரேயொரு நோக்கத்திலேயே நாம் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டோம். எமக்கு பதவிகள் முக்கியமில்லை. மாறாக கட்சியே முக்கியமாகும். ஐக்கிய தேசியக்கட்சியைப் பாதுகாப்பதற்காக நாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயலாற்றத் தயாராக இருக்கின்றோம் என்றார்.