(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தமிழ் மக்களின் பாரம்பரிய உணவான பிட்டு,வடை என்பவற்றின் முக்கியத்துவம் மற்றும் தொன்மைகள் குறித்து திருவிளையாடல் புராணத்தை உதாரணமாகக் கொண்டு பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ்  மாவட்ட உறுப்பினரான எஸ்.ஸ்ரீதரன் பாடமெடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரத்துக்கு கீழ் செயற்படும் நிறுவனங்ளுக்காக நிதி ஒதுக்கீட்டு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

தமிழர் தாயகப்பகுதிகளில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இவ்வாறான மாவீரர் தின நிகழ்வுக்கு தடை கோரி யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் யாழ் பொலிஸ் நிலைய தலைமைப்பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ கொண்டுவந்த மனு மீதான  விவாதத்தில் அவர் நீதிமன்றத்துக்கு சொன்ன ''பிட்டு-வடை'' கதை மூலம் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளை கேவலப்படுத்தியுள்ளதுடன் தனது இனவாதத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

திருவிளையாடல் புராணத்தில் பிட்டுக்காக சிவபெருமான் மண் சுமந்த கதையும் அதனால் அவருக்குப் வழங்கப்பட்ட பிரம்படி தொடர்பிலும் பொலிஸ் பொறுப்பதிகாரி அறிந்திருக்கவில்லை. அவர் தேவையானால் தனது முதுகைத் தடவிப் பார்த்தால் பிரம்படியின் மகிமையை புரிந்து  கொள்வார்  பிட்டோடு மாம்பழம் , பலாப்பழம்,வாழைப்பழம் சேர்த்து சாப்பிட்டால்  கிடைக்கும் சுவை கட்டைச்சம்பல் சாப்பிடும் இந்த பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தெரியுமா?  பிட்டோடு கத்தரிக்காய் பொரியல்,உருளைக்கிழங்குப் பொரியல், முட்டைப்பொரியல்,வெங்காயப்பொரியல் ,இறால் பொரியல்,நண்டுக்கறி,சம்பல், என சாப்பிட்ட தமிழருக்கு தான் அதன் சுவை தெரியும்.

1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் சிறைபிடிக்கப்பட்ட இரு இராணுவ வீரர்களை விடுவிக்கும் பேச்சு வார்த்தைக்காக யாழ்ப்பாணம் வந்த மக்கள் கட்சித்தலைவர்  விஜயகுமாரணதுங்க,மற்றும் அபேகுணசேகர, கோட்டை இராணுவத்தளத்துக்கு பொறுப்பாகவிருந்த கொத்தலாவல ஆகியோருக்கு புலிகள் தயிர் வடை கொடுத்து விருந்து வைத்ததையும் அதன் சுவை தொடர்பில் விஜயகுமாரணதுங்க ஓசி அபேகுணசேகர,கொத்தலாவல ஆகியோர்  ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களையும் இவர் அறிந்து கொள்ள வேண்டும்.

பிட்டும் வடையும் சாப்பிட்ட தமிழருக்கு தான் பீட் ஸாவைக் காட்டியுள்ளதாக  யாழ் பொலிஸ் நிலைய தலைமைப்பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ கூறி தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை கொச்சைப்படுத்தியுள்ளார். இதன்மூலம்   தவறான தகவல்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இவர் தனது மன நிலையை மாற்ற வேண்டும் என்றார்.