தனது நிர்வாகம், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் மாற்றுக் குழுவுடன் ஒத்துழைத்து செயற்படத் தொடங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் தனது தேர்தல் தோல்வியில் அதிருப்தியடைந்து பல்வ‍ேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து வந்த நிலையில் குடியரசுக் கட்சியின் தொடர் அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மிச்சிகன் நிர்வாகம், மாநிலத்தின் தேர்தல் முடிவுகளை சான்றளித்ததும், குடியரசுக் கட்சி செனட்டர்கள், வணிகத் தலைவர்களுடன் சேர்ந்து, ட்ரம்ப்பை மாற்றத்தைத் தொடங்குமாறு அழுத்தம் கொடுத்த நிலையிலேயே ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அத்துடன் ட்ரம்பின் இந்த அறிவிப்பானது தேர்தலுக்கு 20 நாட்களுக்குப் பிறகும், ட்ரம்பிற்கு நீதிமன்றத் தோல்விகளைத் தொடர்ந்தும், ஜோர்ஜியா மற்றும் மிச்சிகன் போன்ற முக்கிய மாநிலங்களில் பிடனின் வெற்றிக்கான சான்றிதழைத் தொடர்ந்தும் வெளியாகியுள்ளது.