( எம்.எப்.எம்.பஸீர்)

மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பன்னிபிட்டிய பகுதியில்,  வைத்தியர் ஒருவரின் காணிக்குள் சென்ற பந்தை பொறுக்கச் சென்ற 17 வயதான மாணவன் ஒருவர், அக்காணி உரிமையாளரான  வைத்தியரின் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். 

இது தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ள மஹரகம பொலிஸார், துப்பாக்கிச் சூடு நடாத்தியதாக  கூறப்படும், மஹரகம புற்று நோய் வைத்தியசாலையின்  வைத்தியரான தாரக பிரியஜீவ எல்விட்டிகலவை கைது செய்து இன்று நுகேகொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

 இதன்போது அவரை எதிர்வரும் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நுகேகொடை நீதிவான் பிரசன்ன அல்விஸ், சந்தேக நபரான வைத்தியரை மன நல மருத்துவர் ஒருவர் முன் ஆஜர் செய்து மன நல அறிக்கை ஒன்றினையும் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

 இந் நிலையில் துப்பாக்கிச் சூட்டில் படு காயமடைந்துள்ள,  மஹரகம, பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த , பன்னிப்பிட்டிய - எரவ்வல தர்மபால வித்தியாலயத்தில் 12 ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஓசல விமுக்தி ஸ்ரீ எனும்  மாணவனுக்கு விஷேட சத்திர சிகிச்சையொன்றும் செய்யப்ப்ட்டுள்ள நிலையில் களுபோவில  போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக  குறித்த வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

 நுகேகொடை நீதிவான் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ள விடயங்களுக்கு அமைவாக சம்பவம் வருமாறு:

 நேற்று ஞாயிற்றுக் கிழமை 22 ஆம் திகதி, பன்னிப்பிட்டிய - எரவ்வல தர்மபால வித்தியாலய மைதானத்தில்  அப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்போது துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட மணவன் ஒருவன் அடித்த பந்து, மைதானத்திற்கு அருகிலுள்ள, வைத்தியர் ஒருவரின் வீடு அமைந்துள்ள காணிக்குள் சென்றுள்ளது.  

அக்காணிக்குள் சென்ற பந்தை பொறுக்க குறித்த மாணவன் சென்ற போது, அங்கிருந்துள்ள வைத்தியர், அவரிடம் இருந்த வாயு ரைபிள் துப்பாக்கியால் அம்மாணவனை சுட்டுள்ளார். 

இதன்போது குறித்த மாணவனின், நெஞ்சுப் பகுதியை வாயு ரைபிள் தோட்டா பதம்பார்த்துள்ளது. 

நெஞ்சின் வலது பக்கத்தில் கடும் காயமடைந்த மாணவன் உடனடியாக, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையான களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். 

அங்கு அவருக்கு உடனடியாக சத்திர சிகிச்சையொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

  படுகாயமடைந்த மாணவன் சார்பில் இன்று நுகேகொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜரான  சிரேஷ்ட சட்டத்தரணி விதுர மஞ்சநாயக்க,  துப்பாக்கிச் சூட்டை நடாத்தும் போது குறித்த வைத்தியர் '  உனக்கு நல்ல வேலை செய்கின்றேன் பார்' எனக் கூறியவாறே துப்பாக்கிப் பிரயோகத்தை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், மஹரகம பொலிஸ் நிலையத்தில், வைத்தியரின் காரை சேதப்படுத்தியதாக குறித்த மாணவனுக்கு எதிராக முறைப்பாடொன்றினை அவர் செய்துள்ளதாகவும், அந்த முறைப்பாடு பொய்யான முறைப்பாடு எனவும் சட்டத்தரணி மஞ்சநாயக்க  நீதிவானிடம் தெரிவித்தார்.

 இவ்வாறான நிலையிலேயே அனைத்தையும் ஆராய்ந்த நீதிவான் பிரசன்ன அல்விஸ், வைத்தியரை எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன்,  வைத்தியரை மானசீக வைத்தியர் ஒருவரிடம் முன்னிலைபப்டுத்தி அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டார்.