மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதீஷ் துபேலியா (வயது 66) கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

நிமோனியா காரணமாக ஒரு மாத காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக துபேலியாவின் சகோதரி உமா துபெலியா-மெஸ்திரி தெரிவித்துள்ளார்.

சதீஷ் துபேலியா தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஊடகங்களில், குறிப்பாக ஒளிப்பதிவாளராக மற்றும் புகைப்படக் கலைஞராகக் கழித்துள்ளார்.

டர்பனுக்கு அருகிலுள்ள பீனிக்ஸ் குடியேற்றத்தில் மகாத்மாவால் தொடங்கப்பட்ட பணிகளைத் தொடர காந்தி மேம்பாட்டு அறக்கட்டளைக்கு உதவுவதில் மிகவும் தீவிரமாக இருந்துள்ளார்.

சதீஷ் துபேலியா, மகாத்மா காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தியின் பேரன் ஆவார். சதீஷ் துபேலியா தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.