(எம்.மனோசித்ரா)

நல்லாட்சி அரசாங்கத்தை தோல்வியடைச் செய்து தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியின் அமர்த்த பௌத்த மகா சங்கத்தினர் பாரியளவில் முயற்சித்திருந்தனர். எனினும் தற்போது மகா சங்கத்தினரே அதிருப்தியடைக் கூடிய வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்தன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நல்லாட்சி அரசாங்கத்தில் பௌத்த மதகுருமார்கள் பழிவாங்கப்படுவதாகக் கூறப்பட்டது. எனினும் தற்போதைய அரசாங்கத்திலேயே அவ்வாறு இடம்பெறுகிறது. மகா சங்கத்தினராலேயே இந்த அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் தற்போது அவர்களே அதிருப்தியடையும் வகையிலான செயற்பாடுகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்றன.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் குறைந்தளவான நிதி ஒதுக்கீட்டில் பெருமளவான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் வகையிலான வேலைத்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பொய்யாகும். காரணம் அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி எந்த சந்தர்ப்பத்திலும் போதாது.

இது மாத்திரமின்றி வெளிநாடுகளில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் வியாபாரம், விபச்சாரம், ஆயுத விற்பனை என்பவற்றின் மூலம் கிடைக்கும் கருப்பு பணத்தை நாட்டுக்கு வரவழைப்பதற்கு ஆதரிக்கும் வகையிலான முன்மொழிவும் இந்த வரவு – செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச சட்டத்தையும் மீறும் வகையிலான செயற்பாடாகும்.

அது மாத்திரமின்றி 2021 ஆம் ஆண்டுக்கான நிவாரண கொடுப்பனவிற்காக 561 பில்லியன் மாத்திரமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2019 ஆம் ஆண்டில் எம்மால் ஒதுக்கப்பட்ட நிதியை விட குறைவாகும். எனினும் அடுத்த ஆண்டு 2,997 பில்லியன் கடன் பெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி வேகம் நூற்றுக்கு 20 சதவீதமாக குறைவடைந்துள்ள இந்நிலையில் இவ்வாறு கடன் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் ஜைக்கா என்பவற்றிடமிருந்து சர்வதேச கடன்பெற தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் ஜைக்கா நிறுவனம் கடன் தர மறுப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் அரசாங்கத்தின் அபிவிருத்திகளை அடுத்த வருடத்தில் அனைவராலும் அவதானிக்க முடியும் என்றார்.