( செ.தேன்மொழி)

மஹரகம பகுதியில் 17 வயதுடைய மாணவனை Air Riffle துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்படடுள்ளார்.

மஹரகம பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஒரு மாணவன்  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தின் போது காயமடைந்த மாணவன் அவரது நண்பர்களுடன் பாடசாலை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இதன்போது பந்து மைதானத்தின் அருகில் அமைந்துள்ள சந்தேக நபரான வைத்தியரின் காணியில் விழுந்துள்ளது.

அந்த பந்தை எடுப்பதற்காக சென்ற மாணவனை குறித்த வைத்தியர்,வாயு ரய்பல் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதன்போது மாணவனின் நெஞ்சுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதுடன்,அவன் சிகிச்சைக்காக கலுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான வைத்தியரை கைது செய்துள்ள மாஹரகம பொலிஸார் ,மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.