இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை சவுதி அரேபியாவுக்கு ரகசியமாக சென்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஆகியோரை சந்தித்துள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலுடனான உறவை சீராக்க அரபு நாடுகளை சமாதானப்படுத்த அமெரிக்காவின் உந்துதலின் மத்தியில், ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டால், மூத்த இஸ்ரேலிய மற்றும் சவுதி அதிகாரிகளுக்கு இடையேயான முதல் சந்திப்பாக இது இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் செங்கடல் கடற்கரையில் நியோமில் நடைபெற்றதாகக் கூறப்படும் சந்திப்பில் இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாத்தின் தலைவர் யோசி கோஹனும் கலந்து கொண்டதாக இஸ்ரேலின் கான் பொது வானொலி மற்றும் இராணுவ வானொலி தெரிவித்துள்ளது.

இது குறித்து நெதன்யாகுவின் அலுவலகம் மற்றும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகம் ஆகியவை உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. சவுதி அரசிடமிருந்து எந்தக் கருத்தும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.