(செ.தேன்மொழி)


முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளிகளை பேணாமை தொடர்பில் இதுவரையில் 465 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு ஒலிப்பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 18 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, அட்டுலுகம பகுதியில் 7 கிராமசேவகர் பிரிவுகளும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய இந்த பகுதிகளில் இருப்பவர்கள் அனைவரும் பயணக்கட்டுப்பாடு விதிமுறைகளுக்கமைய செயற்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.இதேவேளை முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை தொடர்பில் நேற்று முன்தினம் மாத்திரம் 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருமே நீர்கொழும்பு, பேலியகொட மற்றும் குளியாப்பிட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர். அதற்கமைய இதுவரையில் 465 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மட்டுமன்றி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் நபர்கள் அனைவரும் உரிய சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து செயற்பட வேண்டியது கட்டாயமாகும்.

தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருப்பவர்களும் இந்த சுகாதார விதிமுறைகளுக்கமைய செயற்பட்டாலோ, தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்துக் கொண்டாலோ அந்த பகுதிகளையும் வழமைக்கு கொண்டுவர முடியும் என்றார்.