(செ.தேன்மொழி)

நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் ஒலிப்பதிவொன்றை வெளியிடடுள்ள அவர் மேலும் கூறியதாவது,

நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் குற்றப்புலனாய்வு  பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது,ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண்ணொருவர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள் ளனர்.  

இதன்போது காரில் சென்றுக் கொண்டிருந்த சந்தேக நபர்களை தடத்து நிறுத்திய பொலிஸார், காரை சோதனைக்குட்படுத்திய  போது அதிலிருந்து 152   கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

பங்கதெனிய மற்றும் வெரலவத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணும், 34 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் சட்டவிதிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஒருசிலர் இந்த சந்தர்பத்தை சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இது போன்ற செயற்பாடுகள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்திக் கொண்டுதான் இருக்கின்றோம்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இந்த சந்தேக நபர்கள் பயன்படுத்திய காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் சந்தேக நபர்களை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, அவர்களை ஏழுநாட்கள் தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.