இயக்குனரும், நடிகருமான பார்த்திபனுடன் முதன்முறையாக இளம் நடிகர் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கிறார்.

 'மனம் கொத்தி பறவை', 'தேசிங்கு ராஜா', 'வெள்ளக்காரதுரை', 'வேலைன்னு வந்துட்ட வெள்ளக்காரன்', 'சரவணன் இருக்க பயமேன்' என வரிசையாக வெற்றி படங்களை வழங்கி, தன்னுடைய திரையுலக பயணத்தின் இரண்டாவது இன்னிங்சில் முன்னணி இயக்குனராக வலம்வரும் இயக்குனர் எழில் இயக்கத்தில், புதிதாக தயாராகவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் மற்றும் இளம் நடிகர் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கிறார்கள்.  

இவர்களுடன் நடிகை  சாய் பிரியா தேவா, நடிகர் ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். 

காவ்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயகுமரன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு  பிரபல நாவலாசிரியர் ராஜேஷ்குமார் கதை எழுதியுள்ளார். 

முருகேஷ் பாபு வசனம் எழுத, குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். முன்னணி இசை அமைப்பாளரான டி இமான் இசை அமைக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

ஒரே கட்டமாக முழு படப்பிடிப்பையும் நடத்தும் பழக்கமுடைய இயக்குநர் எழில், படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு இப்படத்தில் டைட்டிலையும், ஃபர்ஸ்ட்லுக்கையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.