மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளில் உள்ள பாடசாலைகளைத் தவிர நாட்டின் அரசப் பாடசாலைகள் இன்று மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது.

இவ்வாறு திறக்கப்படும் பாடசாலைகளில் 6 முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாத்திரம் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாடடில் ஒக்டோபர் 4 ஆம் திகதி கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கத் தொடங்கியதன் காரணமாக மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக பாடசாலைகளை திட்டமிட்டவாறு நவம்பர் 09 ஆம் திகதி திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந் நிலையில் நவம்பர் 9 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பதா இல்லையா என்பது தொடர்பில் இலங்கை கல்வி அமைச்சு சுகாதார அதிகாரிகளிடம் பரிந்துரைகளை கோரியிருந்தது.

இது தொடர்பான இறுதித் தீர்மானம் நவம்பர் 18 ஆம் திகதி எடுக்கப்பட்ட நிலையில், குறித்த தீர்மானம் நவம்பர் 19 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

இதேவேளை பாடசாலைகள் ஆரம்பமாகும் பிரதேசங்களில் பஸ்கள் மூலம் மாணவர்களை கொண்டு செல்வதற்கான விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பஸ் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்காக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறை போக்குவரத்து பிரிவுடன் இணைந்து இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதற்கென குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. வலயக்கல்வி பணிப்பாளர் ஊடாக அமைக்கப்பட்ட இந்த குழுவில் இலங்கை போக்குவரத்து சபை, தனியார்  போக்குவரத்து சேவை அதிகாரசபை அதிகாரிகள் ஆகியோர்  இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 

போதுமான பஸ்கள் இல்லாத பட்ச்சத்தில் வலயக்கல்வி அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளர் அங்கீகாரத்துடன் பஸ் சேவைகளை அதிகரிக்க முடியும்.

அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கென போக்குவரத்து சேவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டிகளுக்கு அமைவாக செயல்படுமாறு பொலிசார் வாகன சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை தொடர்பில் பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் வேன்களாக இருக்கலாம், ஏனைய தனியார் வாகனங்களாக இருக்கலாம். இந்த வாகன சாரதிகள் வழிகாட்டி தொடர்பில் கவனம் செலுத்துவது  அவசியமாகும் என்று தெரிவித்தார். 

தண்டப்பணம் விதிப்பதற்காக, கைது செய்வதற்காக, சிறைத்தண்டனைக்காக நாம் இவற்றை மேற்கொள்ளவில்லை பாடசாலை மாணவர்களின் நலனை கவனத்தில் கொண்டே இதனை வலியுறுத்துகின்றோம்.

பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் போது உரிய நடைமுறைகள் தொடர்பில் சுகாதார வழிகாட்டி ஆலோசனைகள் பல உண்டு. கல்வி அமைச்சும் இது தொடர்பாக வழிகாட்டி ஆலோசனைகளை முன்வைத்துள்ளது. 

இதற்கு உட்பட்ட வகையில் வாகன சாரதிகள்  செயல்பட வேண்டும். நாம் சுகாதார பிரிவுடன் இணைந்து இதற்கான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புவதில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என கல்வி அமைச்சு பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.