(நேர்காணல்; :- ஆர்.ராம்)

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்கு கம்பனிகள் மறுத்தால் அதனை சட்டமாக்குவதன் மூலம் நடைமுறைப்படுத்த வைக்கவும் அரசாங்கத்தினால் முடியும் என்று நிதி, மூலதனச்சந்தை, பொது முயற்சியாண்மை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, 

கேள்வி:- கொரோனா வைரஸ் தொற்று பரவலால் உலகளாவிய ரீதியில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் நடைமுறைச்சாத்தியமாகாத வெறுமனே கவர்ச்சிகரமானவை என்று கூறுப்படுகின்றதே?

பதில்:- சில கிரிக்கெட் அணிகள் தொடர்ந்து தோல்வி அடையும். அச்சமயத்தில் புதிய அணியொன்றை அவ்விடத்திற்கு பிரதியீடு செய்து போட்டியை வெல்ல முடியும். அதுபோன்று தான், எதிர்க்கட்சிகளும், தம்மால் இயலாத விடயத்தினை யாராலும் செய்ய முடியாது என்று கருதுகின்றன. அது அவற்றின் பலவீனம். 

அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் நடைமுறைச்சாத்தியமாகக் கூடிய விடயங்களையே முன்மொழிந்துள்ளது. எமது அரசாங்கம் செயற்றிறன் மிக்கது. செயற்பாட்டு ரீதியான வெற்றிகளை காண்பித்திருக்கின்றது. 2005 ஆம் ஆண்டு 91 சதவீதமாக காணப்பட்ட மொத்த தேசிய உற்பத்திக்கான கடனை 2014 ஆம் ஆண்டு 70சதவீதமாக குறைவடையச் செய்திருந்தது இதுவொன்றே எமது செயற்பாட்டு வெற்றிக்கு போதுமான உதாரணமாகும். 

கொரோனா பரவல் இடம்பெறுகின்றது என்பதற்காக தொழில் முயற்சியாளர்கள், உற்பத்தியாளர்கள்  விற்பனையாளர்களை முடங்கியிருப்பதற்கு விட்டுவிட முடியாது. ஆகவே நாம் மாற்றுவழிகளைக் கண்டறிந்து அடுத்தகட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. 

கேள்வி:-பூகோள ரீதியாக கொரோனா வைரஸின் தாக்கம் இருக்கையில் அது பொருளாதார ரீதியாக நிச்சயம் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று கருத முடியாதல்லவா, அவ்வாறாயின் முன்மொழிவுகளை நடைமுடைப்படுத்துவதில்  பிரச்சினைகள் ஏற்படுமில்லையா?

பதில்:- கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்கான இறக்குமதி செலவினத்தில் 300 கோடி டொலரை சேமிக்க முடிந்துள்ளது. இதன் மூலம் ஏற்றுமதிக்கும், தொழில் படைக்கும் அனுகூலங்கள் கிடைத்துள்ளன. அத்துடன் ரூபாவின் பெறுமதி ஸ்திரமான நிலைக்கு வந்துள்ளது. அதனால் அந்நிய செலாவணி சந்தையில் 300 மில்லியன் டொலரைக் கொள்வனவு செய்ய மத்திய வங்கிக்கு முடிந்துள்ளது.

கொரோனாவால் நெருக்கடி என்று கூறவிட்டு, நாம் ரூபாவின் பெறுமதியை குறைத்து சாதாரணமாக நிலைமைகளை கையாள முனைந்திருக்கவில்லை. சவால்களுக்கு முகங்கொடுக்கும் அதேநேரம் இலக்குகளை அடையும் செயற்பாட்டையும் கைவிடவில்லை.

கேள்வி:- இம்முறை முன்மொழியப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தில் துண்டுவிழும் தொகை 3525பில்லியன்களாக இருக்கின்றது. இது கடந்த காலங்களுடன் ஒப்படுகையில் நூற்றுக்கு 45சதவீதம் அதிகரித்துள்ளதே?

பதில்:- தற்போதைய நிலையில் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் அனைத்து தரப்பினர் தொடர்பிலும் அக்கறை கொள்ள வேண்டியுள்ளது. அவர்களுக்குரிய நிவாரணங்களை வழங்க வேண்டியுள்ளது. அதன்காரணமாகவே துண்டுவிழும் தொகை அதிகரித்தது. எனினும் முதலீடுகளை ஊக்குவித்து பொருளாதார வளர்ச்சி வீதத்தினை மேம்படுத்திச் செல்வதற்குரிய திட்டங்களையே கொண்டிருக்கின்றோம். இதன்காரமாக, துண்டுவிழும் தொகை விரைவாக குறைவடையும் என்பது எமது எதிர்பார்ப்பாகும். 

போர் நிறைந்த பின்னர், துண்டுவிழும் தொகை அதிகரித்திருந்தது. பின்னர் அதனை குறைப்பதற்குரிய மூலோபாயங்களை கையாண்டிருந்தோம். அதுபோன்றே தற்போதைய நிலைமையால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வழித்து மீள்வோம் என்ற பெரு நம்பிக்கை எமக்குள்ளது. எம்மால் நிருவகிக்க கூடிய வகையில் தான் துண்டுவிழும் தொகையை பேணி வருகின்றோம்.

கேள்வி:- வரவு,செலவுத்திட்டத்தில் முன்மொழிவு செய்யப்பட்டவற்றை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கான நிதியை எப்படிப் பெற்றுக்  கொள்ளப்போகின்றீர்கள்?

பதில்:- இம்முறை நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் பல்வேறு வழிகளை மையப்படுத்தியே திட்டமிடல்களைச் செய்திருக்கின்றோம். அதற்கு சில உதாரணங்களை என்னால் கூறமுடியும். மிகப்பெருந்திட்டமான துறைமுக நகரத்தில் செய்யப்படவுள்ள முதலீடுகள், மருந்துஉற்பத்தி தொழிற்துறை முதலீடுகள், விவசாயக் கைத்தொழில் துறை, துறைமுகங்களில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள், புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களில் வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்டவை அவற்றில் சிலவாக அமைகின்றன. இந்த முதலீடுகளை அரசாங்கத்தின் ஊடாகவும், தனியார் துறை ஊடாகவும் முன்னெடுப்பதற்கும் திட்டமிட்டிருக்கின்றோம். 

உள்நாட்டு உற்பத்திகளுக்கான முன்னிலைத்துவமும், முக்கியத்துவமும் அளிப்பதும் அரசாங்கத்தின் மிகமுக்கிய கரிசனையாகின்றது. அத்துடன் உள்ளுர் தொழில் முயற்சியாளர்களும் மேம்படுத்தப்படவுள்ளனர். மேலும் நுண்பொருளாதார காரணிகளை மேம்பட்ட வழிக்கு கொண்டுவருவதற்கும் எதிர்பார்திருக்கின்றோம். இதன் மூலம் நாட்டின் வளர்ச்சி வீதத்தினை வினைத்திறனாக்குவதே எதிர்பார்ப்பாகும். 

கேள்வி:- 2021இல் நாடு மொத்த தேசிய உற்பத்தியில் 6.5சதவீதத்தினை அடைந்தாக வேண்டும் என்று கூறுகின்றீர்களே அது சாத்தியமா?

பதில்:- நாட்டின் பொருளாதார நிலைமைகளை சீரடையச் செய்வதாக இருந்தால் 6.5சதவீதம் மொத்த தேசிய உற்பத்தியை அடுத்தவருடத்தில் எட்டுவதே மிகப்பொருத்தமானது என்பதே எனது கணிப்பாகும். அடுத்தாண்டு ஆகக்குறைந்தது மொத்த தேசிய உற்பத்தியில் 5.5சதவீதத்தினை எட்டுவோமாக இருந்தால் அதுவே சிறப்பான நிலை தான். 

எனினும் 2021இற்கான வரவுசெலவுத்திட்டத்தினை தயாரிக்கின்றபோது மொத்த தேசிய உற்பத்தியை நான் ஏற்கனவே கூறிய இலக்கை அடைவதை நோக்கியே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஆகவே அந்தப் பாதையில் விரைவாகச் செல்வதற்கும் அப்பால் புத்திசாலித்தனத்துடன் அர்ப்பணிப்பாக பயணிக்க வேண்டியுள்ளது. எமது கடந்த ஆட்சிக்காலத்தில் 6.5சதவீத இலக்கை எட்டியவர்களே. ஆகவே அந்த இலக்கொன்றும் புதிதல்ல.

கேள்வி:- நாட்டின் வெளிநாட்டுக்கடன்கள் மேலும் அதிகரிக்கும் நிலைமைகளே காணப்படுகின்ற நிலையில் அவற்றை எவ்வாறு முகாமை செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள்?

பதில்:- கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நாட்டின் கடனுக்கான வட்டியாக மட்டும் 1430 பில்லியன் ரூபாக்கள் மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளது. அக்காலத்தில் ரூபாவின் விலை குறைவடைந்ததனால்  1,772 பில்லியன் ரூபாக்கள் மேலதிக கடனாக அதிகரித்துள்ளது.

அதேநேரம், கடன்களை நாம் இரண்டு வகையாக கையாளுகின்றோம்.  தேசிய மற்றும் சர்வதேச கடன் என்றே கையாளப்படுகின்றது. 70சதவீதமாக கட்டுப்படுத்தியிருந்த கடன் சதவீதத்தை, கடந்த நல்லாட்சி அரசாங்கம் 2019 இல் 87 சதவீதமாக உயர்த்தியிருந்தனர். அதனை முதற்கட்டமாக பழைய நிலைக்கு கொண்டுவருவதே இலக்காக உள்ளது. 

மேலும் தேசிய மற்றும் சர்வதேச கடன்கள் தற்போது 60க்கு 40என்ற மட்டத்திலேயே உள்ளது. இதனை 50க்கு50என்ற மட்டத்திற்கு கொண்டுவருவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம். இதன்மூலம் தேசிய, சர்வதேச கடன்களை சமநிலையைக் கொண்டுவர முடியும் என்றும் நம்புகின்றோம். 

கேள்வி:- பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வரவு செலவுத்திட்டத்தின் முன்மொழியப்பட்டிருந்தாலும் அதனை வழங்குவதற்கு தோட்டக் கம்பனிகள் தயாரில்லையே? 

பதில்:- அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக தோட்டத்தொழிலாளர் ஒருவருக்கான சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இவ்வாறான முன்மொழிவை கம்பனிகள் நடைமுறைப்படுத்தும் என்பதே எதிர்பார்ப்பாவும் உள்ளது. 

அவ்வாறு அரசாங்கத்தின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துதற்கு மறுப்புரைக்கப்பட்டால் அதற்கு மாற்றுவழியும் இல்லாமல் இல்லை. அரசாங்கத்தின் இந்த முன்மொழிவைச் சட்டமாக்கவும் முடியும். அவ்வாறு சட்டமாக்கினால் நிச்சயமாக அதனைச் செய்ய வேண்டியேற்படும்.