(செ.தேன்மொழி)

இரட்டை குடியுரிமை உடையவர்கள் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலைமை ஏற்பட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த புலம்பெயர் ஆதரவாளர்களுக்கும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெருவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கு பாராளுமன்ற அதிகாரத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலே இந்த சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளது. 

இந்நிலையில் பசில் ராஜபக்ஷவுக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடாமல், அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக் கொள்ள தீர்மானித்திருப்பார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரட்டை குடியுரிமை பெற்றிருந்த ஒருவரை மத்திய வங்கியின் ஆளுனராக நியமித்ததன் காரணமாகவே மத்திய வங்கி பிணைமுறி மோசடிகளின் போது அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தற்போது சிங்கப்பூரிலே இருக்கின்றார். இந்த நிலைமைகள் ஏற்படாமல் இருப்பதற்காகவே இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றப்படடது.

இதேவேளை இரட்டை குடியுரிமை உடையவர்கள் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்பினர் தேர்தலில் போட்டியிட்டு , தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. 

இவர்கள் இவ்வாறு தேர்தலை வெற்றிக் கொண்டு நாட்டுக்குள் பிரிவினையை ஏற்படுத்திச் சென்றுவிட்டால்  யாரிடம் அது தொடர்பில் கேள்வி எழுப்புவது. இதனால் தான் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்கினேஸ்வருனும் பாராளுமன்றத்தில் அவ்வாறு உரையாற்றியுள்ளார் போன்று தோன்றுகின்றது.தேசப்பற்றாளர்கள் என்று அடையாம் காட்டிக் கொள்ளும் ராஜபக்ஷர்களின் செயற்பாடுகள் இவ்வாறே அமையப் பெற்றுள்ளது. என்றார்