நாளைய தினம் 23.11.2020 தரம் 6-11 வரையான மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச பாடசாலைகளும் தொடங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் பாதுகாப்பை கருத்திற் கொள்ளாது எடுக்கப்பட்ட ஒரு தீர்மானமாகவே கருத வேண்டியுள்ளது என மலையக ஆசிரிய ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,  

நாளைய தினம் 23.11.2020 தரம் 6-11 வரையான அனைத்து அரச பாடசாலைகளும் தொடங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் பாதுகாப்பை கருத்திற் கொள்ளாது எடுக்கப்பட்ட ஒரு தீர்மானமாகவே கருத வேண்டியுள்ளது. ஹட்டன், கினிகத்தேன, தலவாக்கலை, மஸ்கெலியா, காட்மோர் மற்றும் பொகவந்தலாவ என மத்திய மாகாணம் முழுவதுமே கொவிட் தொற்றாளர்கள் பரவலாக இனங்காணப்பட்டுள்ளதோடு, தோட்டபுறங்களிலும் நகரப்பகுதிகளிலும் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன.

யார் தொற்றாளர் என்பதை சரியாக அடையாளம் காணமுடியாத ஓர் சூழ்நிலை நிலவுவதால் மேற்படி அரசாங்கத்தின் அறிவிப்பு ஆசிரிய மாணவர்கள், எவ்வித பாதுகாப்பு நடைமுறையுமின்றி பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பொது போக்குவரத்தையே பயன்படுத்தி பாடசாலைக்கு சமூகம் தர வேண்டிய சூழல் இருப்பதனால் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. 

அரசாங்கம் பாடசாலைகளை ஆரம்பிக்கும் வேளையில், பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என மலையக ஆசிரிய ஒன்றியம் பரிந்துரை செய்துள்ளது. 

1. தரம் 10,11,12 மற்றும் 13 ம் வகுப்புகள்  ஒவ்வொரு நாளும் இயங்கும் வண்ணம் ஒவ்வொரு நாளும் நடத்துதல்.

2. ஏனைய வகுப்புகளை பாடசாலை வகுப்பறைகளில் சமூக இடைவெளியை பொறுத்து சுழற்சி முறையில் இடம் பெற செய்தல். 

3. பாடசாலை நேரங்களில் போக்குவரத்து சேவைகளை முறையாக வழங்க அதிகமான பேருந்துகள் செயற்படும் வண்ணம் ஏற்பாடு செய்தல்.

ஆகவே, அரசாங்கம் மாணவர்களின் நலன் கருதி பாடசாலைகளை மீள திறக்கும் போது அதற்கான முழு பாதுகாப்பு சூழலையும் சேர்த்தே எற்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. கல்வி பணிப்பாளர்கள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முறையான பின்பற்றல் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு,  வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகளை சுகாதார நடைமுறைகளுடன்  பாடசாலைகளை திறக்க வேண்டுமென மலையக ஆசிரிய ஒன்றியம் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. மலையக ஆசிரிய ஒன்றியம்.