-சஹாப்தீன் -

இலங்கையின் சுதந்திரத்திற்கு முந்தியகாலத்திலும்,அதன் பின்னரான காலத்திலும் வாழ்ந்த முஸ்லிம் அரசியல்,மதத் தலைவர்களும் மற்றும் சமூகத் தலைவர்களும் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த இனவாதிகளின் தாக்குதல்களையும்,நெருக்கடிகளையும் ஆட்சியாளர்களின் உதவியுடன் மிகவும் சாதுரியமாக வெற்றிகொண்டார்கள்.

முஸ்லிம் சமூகத்திற்குரிய அரசியல்,கலாசார உரிமைகளை பெற்றுக் கொடுத்ததோடு, முஸ்லிம்களின் கல்வியிலும்,பொருளாதாரத்திலும் கவனம் செலுத்தி அத்துறைகளிலும் முஸ்லிம்களை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தினார்கள்.

ஆனால், இன்றுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் நம்முன்னோர் சம்பாதித்து வைத்த நற்பெயர்களை கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அடிக்கடி கட்சி மாறுகின்றவர்களாகவும், சமூகத்தை ஏமாற்றிப் பிழைப்பவர்களாகவும்,வாக்குறுதிகளை விரைவாக மறக்கின்றவர்களாகவும் இருக்கின்றார்கள். 

இலங்கையை ஆட்சி செய்த பேரினவாதக் கட்சிகளிடையே பலவேறுபாடுகள் உள்ளன. ஆயினும்,சிங்களமய மாக்கலை மேற்கொள்வதில் அவற்றுக்குள் வேறுபாடுகள் காணப்பட்டிருக்கவில்லை. சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றபோதிலும், அவர்களின் இனவிகிதாசாரத்தை விடவும் நிலப்பரப்பின் அளவு அதிகமாகவே இருக்கின்றது. அத்தோடு சிங்களவர்களுக்கான காணியின் அளவு வருடாந்தம் அதிகரித்தே வருகின்றன. தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் காணிகள் வருடாந்தம் குறுகிக் கொண்டு செல்லுகின்றன. அதிலும், முஸ்லிம்களுக்கான இன அடிப்படையிலான காணியின் அளவுமிகவும் குறைவாகவே இருக்கின்றது. 

ஆட்சியாளர்கள் தங்களின் குடியேற்றத் திட்டத்தினை அமுல்படுத்தி சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழுகின்ற மாவட்டங்களில் சிங்களவர்களை குடியேற்றி சிறுபான்மையினரின் இனவிகிதாசாரத்தை குறைத்துக் கொண்டுவருகின்றார்கள். நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இக்குடியேற்றங்களுக்கு அரசகாணிகளும், தமிழ், முஸ்லிம்களின் காணிகளும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ், முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளை அரச தேவைக்காகவும், புனிதபிரதேசம் எனவும், வன இலாகாவுக்குரிய காணிகள் என்றும் நாமங்கள் சூட்டப்பட்டு கபளிகரம் செய்யப்படுகின்றன.

கிழக்குமாகாணத்தில் பல இடங்களில் தமிழ், முஸ்லிம்களின் காணிகள் கபளிகரம் செய்யப்பட்டுள்ளன. முஸ்லிம்களினால் தாம் இழந்த காணிகளை மீளப் பெற்றுக் கொள்ளமுடியவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் பலர் இருந்தபோதிலும், இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தவில்லை. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதுதமிழ், முஸ்லிம்களின் காணிகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி, புல்மோட்டை, திரியாய், மூதூர், தோப்பூர் ஆகிய பிரதேசங்களில் சுமார் 340 ஏக்கர் காணியை அப்பிரதேசங்களில் உள்ள 07 விகாரைகளுக்குரிய காணி என்று தொல்பொருள் திணைக்களம் வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளது.

இக்காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் பேசுகிறார்கள். நீதிமன்றத்திலும் மனுத்தாக்கலை செய்து இடைக்கால தடைகளையும் பெற்றுள்ளார்கள். ஆனால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

அம்பாறை மாவட்டத்தில் பொத்தவில், சம்மாந்துறை, குடிவில், ஆலிம்சேனை உள்ளிட்டபல இடங்களில் முஸ்லிம்கள் பூர்வீகக் காணிகளை இழந்துள்ளார்கள். தமிழர்களும் காணிகளை இழந்துள்ளார்கள். இம்மாவட்டத்தில் பொத்துவில் பிரதேசத்தில் தான் முஸ்லிம்களுக்கு காணி தொடர்பான அதிக பிரச்சினைகள் உள்ளன. ஆனால் இதற்கான தீர்வு இன்னமும் வழங்கப்படவில்லை.

இப்போது பொத்துவிலில் உள்ள முஹமது மகாவிகாரைக்குரிய 72 ஏக்கர் காணியில் முஸ்லிம்கள் அத்துமீறிக் குடியேறியுள்ளார்கள் என்று விகாராதிபதியும், கிழக்கு மாகாண பிரதான சங்கநாயக்கருமான வரகாபொல இந்த சிறிதேரரும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இக்காணிகளை அடையாளங் காண்பதற்கு பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவினர் பொத்துவிலுக்கு சென்று காணிகளை அளவீடு செய்ய முற்பட்டபோது போராட்டம் நடத்தப்பட்டது.

தேர்தல் காலம் என்பதனால் முஸ்லிம் கட்சிகளின் வேட்பாளர்கள் போராட்டங்களில் கலந்துகொண்டனர். பொத்துவில் முஸ்லிம்களின் இக்காணிகளை காப்பாற்றவேண்டுமாயின் பொத்துவில் மண்ணிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்படவேண்டு மென்று பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த முபரப் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பின்னணியில் முஹமது மகா விகாரைக்காக 72 ஏக்கர் காணியை எடுப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி பொத்துவில் முஹமது மகாவிகாரைக்கு விஜயம் செய்த பிரதமர் மஹிந்தராஜபக்ஷ விகாராதிபதியின் வேண்டுகோளுக்கு ஏற்ப விகாரைக்குச் சொந்தமான 72 ஏக்கர் காணியையும் மீட்டு, புனிதபூமியாக பெயரிட்டு அதற்கான அனுமதியை பத்திரத்தைபெற்றுக் கொடுக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவை பணித்துள்ளார்.

இப்பூமியை பாதுகாப்பதற்கு கடற்படை துணைக்குழு ஒன்றினை நிறுவதற்கு பாதுகாப்பு செயலாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். ஆகவே பொத்துவில் மக்களின் 85 சதவீத வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இவ்விவகாரத்தில் தம்மை ஈடுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

மேலும்,முஷரப் அரசாங்கத்தின் ‘அன்புக்குரிய’எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர். பாராளுமன்றத்தில் 20ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, அதனை எதிர்த்தும் அதிலுள்ள 17ஆவது பிரிவுக்கு ஆதரவாக வாக்களித்தும் இருந்தார். அவர் மட்டுமன்றி அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பொத்துவில் காணி விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளனர்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சியாளர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி பேசியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால் எந்தவொரு அரசாங்கத்துடனும் முஸ்லிம்களின் காணிகளை மீளப் பெற்றுத்தாருங்கள் என்று கேட்கவில்லை. 

ஆகவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயநலத்தில் அரசியல் செயற்பாடுகளை கைவிட்டு தங்களை சமூகத்தின் பிணைப்புள்ள பிரதிநிதிகளாக காண்பிக்கவேண்டும். தேர்தல் காலங்களில் காணிகளை மீட்போம் என்றவர்கள் தேர்தல் முடிந்ததும் காணிகள் இழக்கப்படுவதனை வேடிக்கை பார்க்கும் வேடிக்கை மனிதர்களாக இருக்கும் நிலைமாறவேண்டும். 

தனித்துவ இனக்குழுமத்தின் காணிகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஒருஇனம் தமது நிலங்களை இழந்து கொண்டிருப்பது அதனை அடிமை நிலைக்கே கொண்டுசெல்லும். முஸ்லிம் பிரதிநிதிகளினால் சமூகத்தின் இருப்பையும், நிலத்தையும் பாதுகாக்க முடியவில்லை என்றால் அவர்களின் பிரதிநிதிகள் என்றுகூறுவதில் பயனில்லை. முஸ்லிம்கள் மத்தியில் கௌரவத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் தமது பதவிகளினால் முஸ்லிம் சமூகத்திற்கு கௌரவம் கிடைக்கவில்லை என்பதை உணரத் தலைப்பட வேண்டும்.

பதவிகளில் இருப்பவர்கள் முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளை பாதுகாத்தால் அதுவே சமூகத்திற்கு கௌரமளிக்கும் செயற்பாடாகும். முஸ்லிம் சமூகத்திற்காக வாழ்ந்த அறிஞர் சித்திலெப்பை, டி.பி.ஜாயா, துருக்கி தொப்பி அப்துல் காதிர், ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ் போன்றவர்களை சமூகம் இன்னும் மறக்கவில்லை. முஸ்லிம்களுக்கு ஒரு அரசியல் கட்சி இல்லாமலேயே பலவற்றையும் இவர்கள் சாதித்தார்கள்.

தற்போது முஸ்லிம்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு மக்களின் அங்கீகாரமும் காணப்படுகின்றன. அவ்வாறிருக்கையில் முஸ்லிம் சமூகத்தைச் சூழ நடந்துகொண்டிருக்கும் கலாசாரசீரழிவு, இருப்புக்கான ஆபத்து, இனவாதிகளின் அடக்குமுறை, ஆட்சியாளர்களின் இரட்டாந் தரப்பு மனோநிலை போன்றவற்றை அறிந்துகொள்ளாது அவர்களின் பிரதிநிதிகளும், கட்சிகளும் இருக்குமாயின் அச்சமூகத்தின் இருப்பு கேள்விக்குறியாகுது தவிர்க்க முடியாதவிடயமாகிவிடும். இந்தஆபத்தை முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் புரிந்துகொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம்