- கார்வண்ணன் - 

*‘2009இல் இறுதிப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பிரதித் தூதுவராக இருந்த றோஸ் மேரி டி கார்லோ, இலங்கை அரசாங்கம், வாக்குறுதிகளை மீறி பொதுமக்களை இலக்கு வைப்பதாக பலமுறை குற்றம் சாட்டியவர் இந்தநிலையில், இவர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கானதாகவே இருக்கும்’

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் றோஸ் மேரி டி கார்லோ, விரைவில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஐ.நா பொதுச்செயலருக்கு மனித உரிமைகள், அமைதியைக் கட்டியெழுப்புதல் உள்ளிட்ட விடயங்களில் ஆலோசனைகளை கூறும் நிலையில் இருப்பவர், றோஸ் மேரி டி கார்லோ.

இவர், இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகின்ற போதும், இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், ஐ.நாவின் தரப்பில் இருந்து இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

தற்போதைய கொரோனா தொற்று சூழலில், ஐ.நா மற்றும் சர்வதேச அமைப்புகளும், உலகத் தலைவர்களும், வெளிநாட்டுப் பயணங்களை பெரும்பாலும் தவிர்த்தே வருகின்றனர்.

றோஸ் மேரி டி கார்லோ அம்மையாரும் கூட, தனது பணிகளைப் பெரும்பாலும், காணொளி முறையிலேயே முன்னெடுத்து வருகிறார்.

அவர் திடீரென இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள எடுத்துள்ள முடிவு நிச்சயம் ஆச்சரியமானது தான்.

இந்த நெருக்கடியான சூழலில் கூட, அவர் இலங்கைக்கான பயணத்தை முன்னெடுப்பது, மிகமிக அவசியமான பயணமாக இருக்கலாம்.

தற்போதைய நிலையில், இவர் ஏன் இலங்கைக்குப் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் எழுந்துள்ளது?

இலங்கையில் இறுதிப் போரில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா 2010ஆம் ஆண்டில் இருந்தே கவனம் செலுத்தி வந்திருக்கிறது.

முன்னாள் ஐ.நா பொதுச்செயலர் பான்கீ மூன், போர்க்குற்றங்கள் இடம்பெற்றனவா என்று ஆராய்ந்த அறிக்கை சமர்ப்பிக்க மூன்று நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்தார்.

அந்த குழு அளித்த அறிக்கையின் பரிந்துரைகளை மஹிந்தராஜபக்ஷ அரசாங்கம் நிராகரித்த நிலையில், அதன் மீது மேல் நடவடிக்கை எடுக்குமாறு, ஐ.நா மனித உரிமை ஆணையாளராக இருந்த நவநீதம்பிள்ளைக்கு அனுப்பி வைத்திருந்தார் பான் கீ மூன்.

அதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வலியுறுத்தும், தீர்மானங்கள், அமெரிக்காவின் முன்னேற்பாட்டில், 2013ஆம் ஆண்டில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டது.

ஆனால், அதற்கு இலங்கை அரசாங்கம் சாதகமாகப் பதிலளிக்காத நிலையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் விசாரணை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இவற்றின் அடிப்படையில், கலப்பு விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு இலங்கை அரசுக்கு காலஅவகாசமும் அளிக்கப்பட்டு விட்டது.

அந்தக் கால அவகாசம் வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் தான், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து, ஜெனிவா தீர்மானத்தில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த முடிவு ஐ.நாவுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் கடும் அதிருப்திகளைத் தோற்றுவித்துள்ளது.

அடுத்த மார்ச் மாதம் நடக்கவுள்ள, பேரவைக் கூட்டத்தொடரில் அடுத்தகட்டம் குறித்து தீர்மானிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வது அல்லது சர்வதேச சமூகத்தினதும் ஐ.நாவினதும், நிலைப்பாடுகளை எடுத்துக்கூற வேண்டிய நிலையில் ஐ.நா இருப்பது வெளிப்படை.

இத்தகைய சூழலில், ஐ.நாவின் உதவிச் செயலாளர் நாயகம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது தவிர்க்க முடியாத ஒன்று தான்.

கடைசியாக, 2018ஆம் ஆண்டு, ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளராக இருந்த ஜெப்ரி பெல்ட்மன் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அவரும் ஜெனிவாவில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி விட்டுச் சென்றிருந்தார்.

ஆனால்,2018இல் தொடங்கி விட்ட ஆட்சிக் குழப்பங்களும், அடுத்து வந்த ஆட்சி மாற்றமும், நீதி, பொறுப்புக்கூறல், அமைதியை ஏற்படுத்துதல் தொடர்பான வாக்குறுதிகளில் இருந்து இலங்கையை முற்றாகவே தடம்புரளச் செய்து விட்டது.

இந்தநிலையில், ஐ.நாவின் உதவிச் செயலாளர் றோஸ்மேரி  டி கார்லோ இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கானதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2018ஆம் ஆண்டு ஐ.நா பொதுச்செயலராக அன்ரனியோ குர்ரெஸ் பதவிக்கு வந்த பின்னர், றோஸ்மேரி டி கார்லோ அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இவர் ஒன்றும் இலங்கை விவகாரத்தைக் கையாளுவதில் புதியவரல்ல.

இறுதிப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் இருந்தே இவர், இலங்கை தொடர்பான விவகாரத்தை ஐ.நாவில் கையாண்டுவந்தவர்.

2009இல் இறுதிப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பிரதித் தூதுவராக இருந்த றோஸ் மேரி டி கார்லோ, இலங்கை அரசாங்கம், வாக்குறுதிகளை மீறி பொதுமக்களை இலக்கு வைப்பதாக பலமுறை குற்றம் சாட்டியவர்.

போரில் இறுதி நாட்களில் மருத்துவமனைகள், பொதுமக்கள் அதிகம் தங்கியுள்ள பகுதிகள் மீது அரசபடைகளால் பீரங்கித் தாக்குதல்கள், குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இவர் செய்மதிப்பட ஆதாரங்களையும் முன்வைத்திருந்தார்.

இலங்கை அரசு வாக்குறுதிகளை மீறி செயற்படுவதாகவும் உடனடியாக பொதுமக்களை இலக்கு வைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் பாதுகாப்புச் சபையில் வலியுறுத்தியிருந்தார்.

அப்போது பாதுகாப்புச் சபையில் ரஷ்யாவும், சீனாவும் இலங்கைக்கு பக்கபலமாக இருந்தன. அது அமெரிக்காவின் முயற்சிகளுக்கு தடையை ஏற்படுத்தியது.

அண்மையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியிட்டுள்ள a promised land என்ற தனது சுயசரிதை நூலில் கூட, இலங்கையில் இனப்படுகொலையை (ethnic slaughter) நிறுத்த ஐ.நா தவறி விட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஐ.நா அமைப்பில் காணப்பட்ட பிளவுகளே அதற்குக் காரணம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அந்தக் காலகட்டத்தில், அமெரிக்காவோ, ஒபாமாவோ இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்று கூறியிருக்கவில்லை.

இப்போது தான் இலங்கையில் இனப்படுகொலையை தடுப்பதில் ஐ.நா தோல்வியடைந்து விட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை அமெரிக்க அதிகார வட்டம் ஏற்றுக் கொண்ட காலகட்டத்தில், அமெரிக்காவின் முக்கிய இராஜதந்திரிகளில் ஒருவராக இருந்தவர் தான் றோஸ் மேரி டி கார்லோ.

அவர், 2013இல் சூசன் ரைஸ், ஐ.நாவுக்கான தூதுவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், புதிய தூதுவராக சமந்தா பவர் பதவியேற்கும் வரையானகாலத்தில், ஐ.நாவுக்கான பதில் தூதுவராகவும் பணியாற்றியவர்.

அப்போது ஐ.நா பாதுகாப்புச் சபைக்கும் தலைமை தாங்கியிருந்தார்.

அந்தக் காலகட்டத்தில், இலங்கை தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட ஜெனிவா தீர்மானங்களிலும், இவர் தொடர்புபட்டிருந்தார்.

இவ்வாறாக, இலங்கையில் நடந்த போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய மீறல்களை சர்வதேச அரங்கில் கையாண்ட ஒருவரான றோஸ் மேரி டி கார்லோ, தற்போது ஐ.நா பொதுச்செயலருக்கு அடுத்த நிலையில் உள்ள பதவியை வகிக்கிறார்.

இந்தநிலையில், இவரது இலங்கைக்குப் பயணத்தின் போது, பொறுப்புக்கூறல் விவகாரம் குறித்து பேசாமல் இருக்க முடியாது.

தற்போது இந்த விவகாரத்தில் முக்கியமான தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலையில் சர்வதேச சமூகம் இருக்கிறது. 

அதுமாத்திரமன்றி, ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகள் குறித்து ஐ.நா பொதுச் செயலருக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பிலும் இவரே இருக்கிறார்.

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கைப் படையினரை ஐ.நா அமைதிப்படையில் இருந்து நீக்க வேண்டும் என்று,  முன்னாள் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட்ராட் அல்ஹூசேன் பரிந்துரைத்திருந்தார்.

ஒரு கட்டத்தில் அவ்வாறான முடிவை ஐ.நா எடுத்தபோதும், பின்னர் அந்த முடிவுமாற்றியமைக்கப்பட்டது.

ஆபத்து நிறைந்த மாலி, தென்சூடான்போன்றநாடுகளில் பணியாற்றுவதற்கு பல நாடுகளின் படையினர் தயக்கம் காட்டும் நிலையில், இலங்கைப் படையினரையே அங்கு அனுப்பி வருகிறது ஐ.நா.

ஜெனிவா தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகி விட்டதால், ஐ.நா அமைதிப்படையில் இருந்து இலங்கைப்படையினரை முழுமையாக நீக்க வேண்டும் என்றும் ஐ.நா தரப்பில் வலியுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

றோஸ் மேரி டி கார்லோ இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் போது, இதுபற்றி கலந்துரையாடுவதற்கும் வாய்ப்புள்ளதாக, தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஆனாலும், கடந்தவாரம் கூட, ஐ.நா அமைதிப்படைக்கான புதிய அணியொன்றை இலங்கை இராணுவம் அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போதைய நிலையில், பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றத் தயாராக இலங்கை அரசு இல்லை. 

இவ்வாறான நிலையில் றோஸ் மேரி டி கார்லோ போன்ற சர்வதேச பிரமுகர்கள்,  எந்தளவுக்கு இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க முடியும் என்பது முக்கியமான கேள்வியாகவே உள்ளது.

ஏனென்றால், சீனா, ரஷ்யா போன்ற வல்லரசுகளின் ஆதரவு இலங்கைக்கு உள்ளதை இந்த இடத்தில் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.