-சத்ரியன்

* “2021 வரவுசெலவுத் திட்டம் சாதாரண மக்களின் வாழ்க்கை அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியளவுக்கு, சாதகமானதாக இருக்கவில்லை, வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்கக் கூடிய உபாயங்களையோ, வழிமுறைகளையோ கொண்டிருக்கவுமில்லை”

 * கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரவுசெலவுத் திட்டம், சமகால நிலைமையை கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒன்றா என்ற சந்தேகம் உள்ளது. ஏனென்றால் 13 சதவீதம் பாதுகாப்புச் செலவினத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதோடு வெறும் 5.95 சதவீதம் மட்டுமே சுகாதாரத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மஹிந்தராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் 10 தடவைகள் வரவுசெலவுத் திட்ட உரைகளை கம்பீரமாக நிகழ்த்தியிருந்தவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.

முன்னாள் நிதியமைச்சர் ரொனிடிமெல் 12 வரவு செலவுத் திட்டங்களைச் சமர்ப்பித்து செய்த சாதனையை அண்மித்துள்ள மஹிந்தராஜபக் ஷ, இந்த வரவு செலவுத்திட்ட உரையை, இரண்டு பெரும் தேர்தல் வெற்றிகளுக்குப் பின்னரும்கூட, வெற்றிக் கம்பீரத்துடன் நிகழ்த்தியிருக்கவில்லை.

உடலளவில் மிகவும் சோர்வுற்றவராக -தளர்ந்து போனவராக அவர் காணப்பட்டார். 51 பக்கங்களைக் கொண்ட வரவுசெலவுத் திட்டத்தின் பாதி உரையைத் தான் அவரால் நின்றபடி, வாசிக்க முடிந்தது.

சுமார் ஒரு மணிநேரம் கழித்து 10 நிமிட ஓய்வை கோரினார். சபாநாயகர் அரைமணிநேரம், தேநீர் இடைவேளை கொடுத்த பின்னர், அமர்ந்திருந்தே வரவுசெலவுத் திட்ட உரையை வாசித்தார்.

மிகவும் மெதுவாக தனது உரையை பிரதமர் மஹிந்தராஜபக்ஷ நிகழ்த்திக் கொண்டிருந்த போது, அவர் அதனை எப்படியாவது வாசித்து முடித்து விட வேண்டும் என்ற பதற்றம், அருகில் இருந்த அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுக்கும், பின்னால் இருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இருந்ததை அவர்களின் முகங்களே காட்டிக்கொடுத்திருந்தன.

பிரதமர் மஹிந்தராஜபக்ஷவின் இந்த வரவுசெலவுத் திட்டம், புதிய அரசாங்கத்தின் கவர்ச்சிகரமான வரவுசெலவுத் திட்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதுபோதாதென்று, உரையின் தொடக்கத்திலேயே தமது அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை ஏமாற்றாது என்றும், நிவாரணங்களை வழங்கும் என்றும் பிரதமர் நம்பிக்கையை கொடுத்திருந்ததால், இன்னும் சற்று எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ஆனால், வரவுசெலவுத் திட்டம் வாசித்து முடிக்கப்பட்டதும், பெரும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

இந்த வரவுசெலவுத் திட்டம் சாதாரண மக்களின் வாழ்க்கை அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியளவுக்கு, சாதகமான ஒன்றாக இருக்கவில்லை என்பது ஒரு விடயம்.

வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்கக் கூடிய உபாயங்களையோ, வழிமுறைகளையோ இது கொண்டிருக்கவில்லை என்பது இன்னொரு விடயம்.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய எந்த திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை என்பது மூன்றாவது விடயம். அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி எங்கிருந்து கிடைக்கப் போகிறது என்ற கேள்வி நான்காவது விடயம். இப்படி பல சந்தேகங்கள், கேள்விகள், ஏமாற்றங்களுடன் அமைந்திருக்கிறது இந்த வரவுசெலவுத் திட்ட அறிக்கை.

கடன்களைக் கோரப் போவதில்லை என்றும், முதலீடுகளை மாத்திரமே வரவேற்கிறோம் என்றும் கூறிவந்த அரசாங்கம், இந்தமுறை ஆசிய அபிவிருத்தி வங்கி, உலகவங்கி, ஜப்பானின் ஜய்கா போன்ற சர்வதேச நிறுவனங்களிடம் கடன்களை வாங்கவுள்ளதாக பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.

இது கடன்கள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கும், நடைமுறைப்படுத்தலுக்கும் இடையில் வேறுபட்ட நிலையை காட்டுகிறது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரவு செலவுத் திட்டம், இந்த தொற்றைக் கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒன்றா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

13 சதவீதம் பாதுகாப்புச் செலவினத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த வரவு செலவுத் திட்டத்தில், வெறும் 5.95 சதவீதம் மட்டுமே சுகாதாரத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

2021ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த செலவு 3,441 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில்,  அரசாங்கத்தின் வருமானம்  1,886 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனால், 1,555 பில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தமுறை வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறை 45சதவீதமாக அதிகரித்திருக்கிறது. 2020இல் இந்தப் பற்றாக்குறை 41சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது.

வருமானமாக கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள 55சதவீதமான நிதி கூட, எவ்வாறு கிடைக்கப் போகிறது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

ஏனென்றால், கொரோனா தொற்று அடுத்த ஆண்டில் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே, அரசாங்கம் எதிர்பார்க்கின்ற நிதியை வருமானமாகப் பெற முடியும்.

சுகாதார அமைச்சரே மூன்று ஆண்டுகள் கொரோனாவுடன் வாழத் தயாராகுங்கள் என்று நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார். இந்தநிலையில், தொற்று கட்டுப்படுத்தப்பட முடியாத நிலை காணப்பட்டால், சுற்றுலா, ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி, வரி, தீர்வை என்று எல்லாவித வருமானங்களும் இழக்கப்படும். அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வரைக்கும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் தீருவதற்கு வாய்ப்பில்லை என்று கணக்கிட்டாலும் கூட, வரவுசெலவுத் திட்டத்தில் பாதிக்கும் மேல், பற்றாக்குறையாகவே இருக்கப் போகிறது. இந்தப் பற்றாக்குறையை, அரசாங்கம் கடன்களின் மூலம் மட்டும் தான் ஈடுசெய்ய முடியும். 

திரும்பத் திரும்ப அரசாங்கம் கடனில் மூழ்குவதற்கே இந்த வரவுசெலவுத் திட்டம் இடமளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஏற்கனவே, அரசாங்கம் 13 ஆயிரத்து 200 பில்லியன் ரூபா கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது. இந்த நிலையில், அரசாங்கம் இந்த ஆண்டில் 2 ஆயிரம் பில்லியன் ரூபாவை கடனாக பெறவுள்ளது. அடுத்து ஆண்டில் மேலும், 3 ஆயிரம் பில்லியன் ரூபாவை கடனாகப் பெறவுள்ளது. இதன் மூலம், நாட்டின் கடன்சுமை, அடுத்த ஆண்டு 17 ஆயிரத்து 200 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் என்று, ஜே.வி.பி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்திருக்கிறார்.

இது,  இந்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் செலவினங்களில் ஐந்து மடங்கிற்கும் அதிகமாகும்.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தபோது, ஏதேதோ மாயங்களை நிகழ்த்தப் போவது போன்று வாக்குறுதிகளும் கொடுத்திருந்தது.

கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் வாக்குறுதிகளும், அவரது வியத்மக அமைப்பின் திட்டங்களும், நாட்டில் புதிய மாற்றங்கள் நிகழ்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் எந்த புதுமையையும் முதலாவது வரவுசெலவுத் திட்டத்தில் இந்த அரசாங்கத்தினால் வெளிப்படுத்த முடியவில்லை. இதற்கு ஒரு காரணம்,  நாட்டின் கடன்சுமை. இன்னொரு காரணம், கொரோனா தொற்று. இந்த இரண்டையும் உதறித் தள்ளி விட்டு, நாட்டின் பொருளாதாரத்தில் அதிசயங்களை நிகழ்த்த முடியவில்லை. ஒரு வருட பதவிக்காலத்தில் இந்த அரசாங்கம், உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு என்று கூறினாலும், இஞ்சி, மஞ்சள் இறக்குமதி தடையை நீடிப்பதை விட, வேறெந்த விடயத்திலும் முன்னேற்றத்தைக் காட்டவில்லை. இந்த தடைகூட, இதுவரையில் நாட்டு மக்களுக்கு சுமையை கூட்டியிருக்கிறதே தவிர, நாட்டுக்கு வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கவில்லை.

அதைவிட, இறக்குமதிக் கட்டுப்பாடுகள், தடைகளின் மூலம், கிட்டத்தட்ட ஒரு மூடிய பொருளாதாரத்துக்கு நாட்டைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது.

ஆனாலும், அரசாங்கத்தினால், ஒரு சாதகமான வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியாமல் போயிருக்கிறது.

அதுவும் தற்போதைய சூழலுக்கேற்ற உற்பத்திகளை பெருக்கக் கூடிய உத்திகள் எதையுமே வரவுசெலவுத் திட்டம் முன்வைத்திருக்கவில்லை.

வேலைவாய்ப்புகளை உருவாக்காத- வருமான மூலங்களைப் பெருக்காத, சாதாரண மக்களின் பொருளாதாரச் சுமைகளைக் குறைக்காத இந்த வரவுசெலவுத் திட்டம் நாட்டின் கடன்சுமையை அதிகரிக்கச் செய்யும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இது கடைசியில் சாதாரண மக்களின் தலையில் தான், சுமையை இன்னும் அதிகரிக்கச் செய்யும். இந்த அரசாங்கத்தின் முதல் வரவுசெலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணங்களை அளிக்கப் போவதாக தொடக்கத்தில், நம்பிக்கையளித்த பிரதமர், தனது உரையின் முடிவில் ஏமாற்றத்தையே அளித்திருக்கிறார்.