(செ.தேன்மொழி)


கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆறு பொலிஸ் பிரிவுகள் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் ஒலிப்பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியதாவது,

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேலும் சில கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம பொலிஸ்பிரிவில், அட்டுலுகம பகுதியில் 7 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஆறு பொலிஸ் பிரிவுகள் நாளை(23.11.2020)அதிகாலை 5 மணியுடன் வழமைக்கு திரும்பவுள்ளன. 

அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் பொரள்ளை, வெல்லம்பிட்டி, கொம்பனிவீதி மற்றும் கோட்டை ஆகிய பொலிஸ் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் கடவத்த மற்றும் ஜா-எல ஆகிய பொலிஸ் பிரிவுகளும் வழமைக்கு திரும்பவுள்ளன. எனினும் பொரள்ளை பொலிஸ் பிரிவில் வணாத்துமுல்ல கிராமசேவகர் பிரிவும், கொம்பனிவீதி பொலிஸ் பிரிவில் வேகந்த கிராமசேவகர் பிரிவும் தொடந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்தும் 18 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும். அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில், கிரேண்பாஸ், மோதர, மட்டக்குளி, கொட்டாஞ்சேனை, தெமட்டகொட, கரையோரப் பொலிஸ் பிரவு, புறக்கோட்டை, மருதானை, ஆந்திருப்பு, மாளிகாவத்த மற்றும் வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் பேலியகொட, வத்தளை, றாகம, நீர்கொழும்பு மற்றும் களனி ஆகிய பகுதிகளும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் வழமைக்கு திரும்பியுள்ளதற்கு காரணம், அந்த பகுதியில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் தொகை குறைவடைந்தமையும், அப்பகுதி மக்கள் உரிய சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்தமையுமே. அதனால் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்களும் உரிய சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

இதேவேளை, மேல்மாகாணத்தை தவிர ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் நாளைடன் திறக்கப்படவுள்ளன. பாடசாலைக்குள்  மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுப்பர். பொலிஸார் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தொடர்பிலேயே கவனம் செலுத்தவுள்ளனர்.  இதன்போது சாரதிகளையோ, சாரதி உதவியாளர்களையோ கைது செய்யப்போவதில்லை. அவர்களுக்கு ஆலோசனை மாத்திரமே செய்துக் கொடுக்கப்படும்.