மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு வடக்கு கிழக்கில் அரசாங்கம் பல்வேறு தடைகளை விதித்துள்ள போதும் தமிழ் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்கள் மற்றும் மக்களுக்கான அஞ்சலியை மக்கள் ஏதோ ஒரு வகையில் மேற்கொள்ளுவார்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2019 ஆம் ஆண்டு புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நவம்பர் மாதம் 16 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டாலும், கடந்த வருடம் மாவீரர்களினுடைய, மாவீரர்களை அடக்கம் செய்த இடங்களுக்கும் உறவினர்கள் சென்று அஞ்சலி செலுத்த பெரிய அளவில் தடை விதிக்கப்படவில்லை.அரசாங்கத்தினுடைய காரணம் பாராளுமன்ற தேர்தல் ஒன்று இடம்பெற இருந்த சூழ்நிலையில், தமிழ் மக்களினுடைய வாக்கினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக 2019 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளில் பெரிய அளவில் தடை ஏற்படுத்தப்படவில்லை.

ஆனால் தற்போது கடந்த மாதம் தியாக தீபம் திலிபனுடைய நினைவேந்தல்களின் போது அவருடைய நினைவுநாள் அஞ்சலி நிகழ்வுகளுக்கும் நீதிமன்ற தடை உத்தரவை எனக்கும் எடுத்திருந்தார்கள். என்னைப் போல பலருக்கும் நீதிமன்ற தடை உத்தரவை எடுத்திருந்தார்கள். அதேபோல நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வுக்கு கூட இந்த அரசாங்கம் முழுமையான நீதிமன்ற தடை உத்தரவை விடுத்திருக்கிறார்.

மேலும் இன்றிலிருந்து(22)ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஒரு வர்த்தமானி அறிவித்தலை கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்தி இருக்கிறார். இலங்கையினுடைய பொதுமக்களுடைய பாதுகாப்புக்கு முழுமையான பொறுப்பும் இராணுவம் மற்றும் முப்படைக்கும் அந்த பொறுப்பை ஒப்படைப்பதாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் இன்று 22 ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக வந்த இந்த அரசாங்கம் தமிழ் மக்களை ஒரு அச்ச உணர்வில் சுயமாக செயற்பட முடியாதவாறு கொண்டு வருவதற்குத்தான் இந்த மாவீரர்களின் அஞ்சலி நிகழ்வுகளுக்கும், பொது மக்களுடைய பாதுகாப்பு இராணுவத்திடம் ஒப்படைப்பது குறிப்பாக நவம்பர் 21 ஆம் திகதியில் இருந்து  மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்படுகின்ற நிலையில் அவசர அவசரமாக 22 ஆம் திகதியில் இருந்து பொது மக்களுடைய பாதுகாப்பு முழுமையாக இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

குறிப்பாக வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்களை நசுக்கி அவர்களை மிரட்டி தான் யுத்தத்தை எப்படி வழி நடத்திய போது தமிழ் மக்கள் எப்படி அச்ச உணர்வுகளோடு இருந்தார்களோ அதே அச்ச உணர்வை தொடர்ச்சியாக தக்க வைத்து தங்களுடைய குடியேற்றங்களை குறிப்பாக தமிழ் மக்கள் அரசாங்கத்தினுடைய செயல்பாடுகளுக்கு எதிராக  செயல்படாமல் விடுத்து அச்ச உணர்வு இருக்கின்றபோது வடக்கு கிழக்கில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை மிக விரைவாக செய்வதற்கு இந்த அரசாங்கம் முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.

-கொரோனா தொற்று உலகத்தில் பல நாடுகளில் பல அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையிலும் அதனுடைய தாக்கம் தற்போது மிகத் தீவிரமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் இஸ்லாமிய மதத்தலைவர்கள் மூலம் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

கொரோனா தொற்றினால் மரணிக்கின்ற தங்களுடைய மதத்தைச் சேர்ந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி தரவேண்டும் என்று. அதனை நான்  வரவேற்கிறேன். அவர்களுடைய மதம் சார்ந்த நம்பிக்கைக்கு சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பெற்று அதை செய்வதை நான் வரவேற்கின்றேன். குறித்த விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் என்னுடைய யோசனையை நான் கூறியிருக்கின்றேன். ஆனால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இலங்கையில் கொரோனா தொற்றில் மரணிக்கின்ற அனைத்து முஸ்லிம் உறவுகளினுடைய உடல்களை மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்வதற்கு ஒரு யோசனை முன்வைத்ததாக அறிகின்றேன்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கேட்க விரும்புகின்றேன். மன்னர் என்ன சுடுகாடா? கடல் இருக்கின்ற பிரதேசத்தில் அடக்கம் செய்யவேண்டும் என்றால் இலங்கையை சுற்றி எல்லா இடமும் கடல் தான் இருக்கின்றது. அந்தந்த மாவட்டங்களில் இறக்கின்றவர்களை அவர்களுடைய மாவட்டத்தில் ஒரு பொதுவான இடத்தில் அடக்கம் செய்வது தான் முறை. ஆனால் ஏனைய மாவட்டங்களில் மரணிக்கின்றவர்களையும் மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்வது என்பதனை மன்னார் மாவட்ட மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அது ஒரு நியாயமான செயலும் அல்ல. அபிவிருத்திகளை அம்பாந்தோட்டை அவர்களுடைய மாவட்டங்களுக்கு செய்து கொண்டு சடலங்களை அடக்கம் செய்வதற்கு மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்த மன்னார் மாவட்டம் என்ன சுடுகாடா என்பதை அரசாங்கத்திடம் கேட்க விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.