இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் ஒருவருக்கு 2020 நவம்பர் 19 அன்று கொவிட்-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதனை இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவிக்கின்றது.

குறித்த ஊழியர் தற்போது மருத்துவ கவனிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மத்திய வங்கி துரிதமாகச் செயற்பட்டு, அதன் தலைமை அலுவலக வளாகத்தில் கடுமையான துப்பரவு மற்றும் தொற்றுநீக்கம், நெருங்கிய தொடர்புடையவர்களை கண்டுபிடித்தல் மற்றும் சாத்தியமான தொடர்புடையவர்களுக்கு பீசிஆர் (PCR) பரிசோதனைகளை ஏற்பாடுசெய்தல் உள்ளடங்கலாக நோய்ப்பரவலினைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

பரிசோதிக்கப்பட்ட அனைத்து ஏனைய ஊழியர்களுக்கும் வைரஸ் தொற்றலில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை வழிமுறையொன்றாக, இதுவரையிலும் வங்கி வளாகத்தில் நேரடியாகத் தொழிற்பட்ட வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவமும் 2020 நவெம்பர் 20 தொடக்கம் இரு வார காலப்பகுதிக்கு வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு தீர்மானித்துள்ளது.

மத்திய வங்கியானது அதன் ஊழியர்களினதும் வருகை தருகின்ற பொதுமக்களினதும் பாதுகாப்பினை மிகவும் முன்னுரிமைமிக்கதாகக் கருதி அவர்களைப் பாதுகாப்பதற்கு கண்டிப்பான நோய்த்தொற்று தடுப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றது.

மத்திய வங்கியின் நன்கு பரீட்சிக்கப்பட்ட தொழிற் தொடர்ச்சித் திட்டம் (BCP) மற்றும் அவசர நிலைமையொன்று ஏற்படும் சந்தர்ப்பத்தில் வழிகாட்டலை வழங்குவதற்கு அவசர நடவடிக்கை செயலணியொன்றினை முன்கூட்டியே உருவாக்கியமை, சுகாதார அதிகாரிகளுடனான ஆலோசனையுடன் வங்கியினால் எடுக்கப்பட்ட முனைப்பான வழிமுறைகள், கிரமமான இணையமூடான அளவீடுகள் ஊடாக அனைத்து ஊழியர்களையும் தொடர்ச்சியாகவும் உன்னிப்பாகவும் பரிசோதித்தல், நேரடியாக பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கென பணிச்சுழற்சியினை அடிப்படையாகக் கொண்ட பணியாற்றும் ஏற்பாடுகள் மற்றும் செயற்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள செயல்திறன்வாய்ந்த விதத்தில் வீட்டிலிருந்து பணியாற்றும் ஒழுங்குகள் என்பன இந்நிகழ்வின் பின்னரும் கூட இடையூறுகளின்றி வங்கி தொடர்ந்தும் தொழிற்படுவதற்கு உதவியளிக்கும்.

இப்பின்னணியில், மத்திய வங்கியானது அதன் அத்தியாவசியமான தொழிற்பாடுகள் வழமை போன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நிதியியல் சந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றது.

பொதுமக்கள், இலத்திரனியல் வாயிலாக cbslgen@cbsl.lk/fcrd@cbsl.lk அல்லது 011-2477966 என்ற தொலைபேசி ஊடாக அத்துடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஏனைய இலக்கங்கள் ஊடாக வங்கியினைத் தொடர்ந்தும் தொடர்புகொள்ள முடியும்.