பாக்தாத்திற்கு வடக்கே பயங்கரவாதக் குழு பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் ஆறு ஈராக்கிய பாதுகாப்பு படையினரும் மூன்று பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகரிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சம்பவ இடத்தில், சாலையோர குண்டுத் ஒரு தாக்குதல் ஒரு காரை தாக்கியுள்ளது.

அதன் பின்னர் தகவலறிந்த காவல்துறையினரும், அரசுடன் இணைந்த துணை இராணுவப் படையினர் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவத்தில் மூன்று பொதுமக்களும், ஹஷ்த் அல் ஷாபியின் நான்கு உறுப்பினர்களும், இரண்டு பொலிஸாரும் உயிரிழந்தாக திக்ரித் நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜூயா பகுதியின் மேயர் முகமது ஜிதானே உறுதிப்படுத்தினார்.

இந்த தாக்குதல் குறித்து எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், இது இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) ஜிஹாதிகளின் வேலை என்று பொலிஸாரும், மேயரும் குற்றம்சாட்டியுள்ளனர்.