(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

வரவு செலவு திட்டத்தில் மலையக பிரதேசங்களுக்கு  அவிருத்திகளுக்காக கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் தோட்டத்தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் மக்களின் நலன் கருதி எதிர்க்கட்சி மலையக உறுப்பினர்களும் வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கும் என நம்புகின்றோம் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

1980களில் மலையகத்துக்கு தனிவீட்டு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு, இதுவரை 35ஆயிரத்தி 142 தனிவீடுகள் மலையக தொழிலாளர்களுக்கு நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வரவு செலவு திட்டத்திலும் எனது அமைச்சுக்கு கீழ் தனிவீட்டு திட்டங்களை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.

கடந்த அரசாங்க காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் இருக்கும் மின்சாரம், நீர் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று மலையகத்துக்காக பல்கலைக்கழகத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு அப்பல் முன்மொழி தேசிய பாடசாலை ஒன்றை அமைப்பதற்கும் முன்மொழியப்பட்டிருக்கின்றது.

மேலும் கடந்த அரசாங்கத்தில் இருந்தவர்களுக்கு மலையக உதவி ஆசியர்களுக்கான நியமனத்தை 4அரை வருடங்களாக பெற்றுக்கொடுக்க முடியாமல் போனது. ஆனால் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அதுதொடர்பில் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். 

ஆனால் நாங்கள் ஜனாதிபதியுடன் கதைத்து உதவி ஆசிரியர்களுக்கான நியமனங்களை பெற்றுக்கொடுத்துள்ளோம். அதற்காக நாங்கள் ஊடகங்களுக்கு முன்னால் இதனை சொல்லிக்கொண்டிருக்கவில்லை.

மேலும் தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா என்ற உறுதிமொழி தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சியினரும் வழங்கியதொன்றாகும். ஆனால் தற்போது அதனை வழங்குவதாக தெரிவித்ததுடன் அதனை எப்படி வழங்கப்போகின்றது, கூட்டு ஒப்பந்தத்தில் அல்லாமல் வரவு செலவு திட்டத்தில் அதனை வழங்க முடியாது என தெரிவிக்கின்றனர். அப்படியானால் தேர்தல் காலத்தில் நீங்கள் அந்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பொய்யா என கேட்கின்றேன்.

அதனால் மலையக மக்களுக்கு வரவு செலவு திட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தேவையான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் மலையக மக்களது நலனை கருத்திற்கொண்டு எதிர்க்கட்சியினரும் அதற்கு ஆதரவளிக்கும் என நம்புகின்றேன் என்றார்