அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கை ஜோ பைடன் பதவி யேற்றவுடன் அவருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக டுவிட்டர் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ள போதிலும் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், தேர்தலில் மோசடி நடைபெற்றதாக தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றார்.
இந்நிலையில், டிரம்ப் தோல்வியை ஒப்பு கொள்ளாவிட்டாலும் 2021 ஜனவரி 20 ஆம் திகதி ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் வெள்ளை மாளிகைக்கு சொந்தமான மூன்று டுவிட்டர் கணக்குகளையும் இடைமாற்றம் செய்வதற்கு தீமானித்துள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கான @POTUS, அமெரிக்க முதல் பெண்மணியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கான @FLOTUS மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கான @VP ஆகியன காப்பகப்படுத்தப்பட்டது முன்னைய டுவிட்டர் பதிவுகள் எதுவும் இல்லாத நிலையில் 2021 ஜனவரி 20 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் ஜோ பைடனிடம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜோர்ஜியா மாநிலத்தில், ட்ரம்புக்கும், பைடனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைந்த அளவில் இருந்ததால் மறு வாக்கு எண்ணிக்கைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி வாக்குகள் மீண்டும் கைகளால் எண்ணப்பட்டன.

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் மறு வாக்கு எண்ணும் பணி முடிவடைந்து 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் வென்றதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து வாக்கு எண்ணிக்கை முடிவில் பைடன் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஜோர்ஜியா மாகாணத்தில் உள்ள 16 கல்லூரி வாக்குகளும் ஜோ பைடனுக்கு கிடைத்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 306 தேர்தல் சபை வாக்குகளுடனும் ஜனாதிபதி ட்ரம்ப் 232 வாக்குகளுடனும் உள்ளனர்.
இது தொடர்பாக மாநில செயலாளரின் இணையதளத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெற்றியாளரை இயந்திர வாக்கு எண்ணிக்கை துல்லியமாக தெரிவித்ததை, மறு வாக்கு எண்ணிக்கை உறுதிப்படுத்தியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜார்ஜியா மாநிலம் ஜனநாயக கட்சியின் வசம் சென்றுள்ளது. 30 ஆண்டுகளில் முதல்முறையாக வெற்றி பெற்ற ஜனநாயக ஜனாதிபதி வேட்பாளர் என்ற பெருமையை ஜோ பைடன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.