இலங்கை மத்திய வங்கியில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதையடுத்து வங்கியின் ஆளுநர் உட்பட பல மூத்த அதிகாரிகள் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு தொற்றுறுதிப்படுத்தப்பட்டவர்  இலங்கை மத்திய வங்கியின் அலுவலக ஊழியர் எனவும், மேலும் அவர் மூத்த அதிகாரிகளுக்கு உணவளித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் விளைவாக மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ.டி லக்ஷ்மன் மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கி இன்று (21) இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்ககையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

இலங்கை மத்திய வங்கியின் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதையடுத்து வங்கி தொற்று நீக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள்  பி.சி.ஆர் பரிசோதiனக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி வளாகத்திற்குள் வேறு எந்த நபருக்கும் இதுவரை  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவசர காலங்களில் மத்திய வங்கி சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக 'அவசர பணிக்குழு' அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சூழ்நிலையிலும், இலங்கை மத்திய வங்கியின் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் எந்தவித இடையூறும் இன்றி தொடர்ந்து செயல்படும் என்பதை அவர்கள் மேலும் மக்களுக்கு தெரிவிப்பதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.