(செ.தேன்மொழி)

மன்னார் - எருக்கலம்பிட்டி பகுதியில்  சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த 710 கிலோ கிராம் மஞ்சள் மற்றும் 3.7 கிலோ கிராம் கேரளாகஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமத்திய கடற்படையினரும், மன்னார் பொலிஸாரும் இணைந்து நேற்று  வெள்ளிக்கிழமை மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எருக்கலம்பிட்டி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து அந்த படகை சோதனைக்குட்படுத்தியுள்ளனர். இதன்போது படகுல் மறைத்து எடுத்துவரப்பட்ட  10 பொதிகளை மீட்டுள்ளனர். பின்னர் குறித்த பொதியிலிருந்து 710 கிலோ கிராம்  மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது படகிலிருந்து மீட்கப்பட்ட இன்னுமொரு பொதியிலிருந்து 3.7 கிலோ கிராம் கேரளா கஞ்சா போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து படகில் வந்த இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மன்னார்- எருக்கலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.