(நா.தனுஜா)

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பமாகி, எதிர்வரும் ஆறுமாதகாலத்திற்கு நீடிக்கக்கூடிய வகையிலான கடன்கால தாமதத்தினை வழங்குமாறு மத்தியவங்கி உரிமம்பெற்ற வங்கிகளிடம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை காரணமாக வியாபாரங்களும் தனிநபர்களும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். அதற்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கியலேயே மத்தியவங்கி மேற்படி கோரிக்கையை முன்வைத்திருக்கிறது. அதன்படி தகுதியுடைய கடன்படுநர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னதாக கடன் காலதாமதத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த கடன் காலதாமதம் மூலதனம் மற்றும் வட்டி ஆகிய இரண்டிற்குமாக வழங்கப்படலாம். தகைமையுடைய கடன்படுநர்களில் கொவிட் - 19 பரவலினால் நிதிப்பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அடையாளம் காணப்பட்ட வணிக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள வியாபாரங்கள், உரிமையாளர்கள், தனிநபர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள், சுயதொழில் வணிகங்கள் மற்றும் வெளிநாட்டு வருமானமீட்டுவோர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

அதேபோன்று கடன் காலதாமதத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையுடைய கடன்வசதிகளில் 2020 அக்டோபர் முதலாம் திகதியில் செயற்படு கடன் பிரிவிலுள்ள ரூபாய் மற்றும் வெளிநாட்டு நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தவணைக்கட்டணக் கடன்கள், குத்தகை வசதிகள், அடகுபிடித்தல், மேலதிகப்பற்று, வர்த்தக நிதியிடல் மற்றும் சௌபாக்கியா கொவிட் - 19 மீளெழுச்சி வசதி நீங்கலாக ஏனைய கடன்வசதிகள் உள்ளடங்குகின்றன.

கடன் காலதாமதம் தொடர்பான மேலதிக விபரங்களை, தாம் கடன்பெற்ற வங்கிகளைத் தொடர்புகொள்வதன் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், அதற்கமைவாக எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் கடன் காலதாமத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறும் மத்தியவங்கி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.