(எம்.எப்.எம்.பஸீர்)


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெஜட் வீதி  வீட்டுடன் தொடர்புபட்டு, முன்னாள் தேசிய உளவுச் சேவை பிரதானி  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  நிலந்த ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற ஒரு மணி நேரத்துக்கு முன்னர்  மூன்று தடவைகள், முன்னாள் ஜனாதிபதியின் பிரதான பாதுகாப்பு அதிகாரி ஊடாக  முன்னாள் ஜனாதிபதியை தொடர்பு கொண்டுள்ளதாக  ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் வெளிப்படுத்தப்பட்டது.சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூரில் இருந்தபோது,  இவ்வாறு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் முதல் தற்கொலை தாக்குதல் இடம்பெற முன்னர் முற்பகல் 7.57, மு.ப.7.59, மு.ப.08.01 இற்கு இவ்வாறு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாக வெளிப்படுத்தப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெஜட் வீதி வீட்டில், தொலைபேசி கட்டமைப்பு தொகுதியில், இயக்குனர்களாக குறித்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் சேவையில் இருந்த விமானப்படை வீரரின்  சாட்சியத்துக்கு அமைய  இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.

 முற்பகல் 7.59 மணிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன தொடர்புபட்ட தொலைபேசி அழைப்பு, 157 செக்கன்களும், மு.ப.8.01 இற்கு தொடர்பு பட்ட தொலைபேசி அழைப்பு 93 செக்கன்களும் நீடித்ததாக குறித்த விமானப்படை வீரர் சாட்சியமளித்தார்.

 தாக்குதல்களின் பின்னரும் நிலந்த ஜயவர்தன,  பிற்பகல் 1.10 மணிக்கு 687 செக்கன்கள்  நீண்ட அழைப்பு உள்ளிட்ட பல அழைப்புக்களை எடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கடந்த 2019 ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி இந்தியா நோக்கி சென்றதாகவும் அங்கிருந்து நேரடியாக அவர் சிங்கப்பூருக்கு  சிகிச்சைக்காக சென்றதாகவும் குறிப்பிட்ட அந்த விமானப்படை வீரர்,  பல சந்தர்ப்பங்களில் நிலந்த ஜயவர்தனவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரியும் தொலைபேசி ஊடாக  தொடர்புபட்டதாக தெரிவித்தனர்.

'முன்னாள் ஜனாதிபதி கையடக்கத் தொலைபேசி ஒன்றினை பயன்படுத்துவது தொடர்பில் எனக்கு தெரியாது. எனினும் அவரது பிரதான பாதுகாப்பு அதிகாரிகள் இருவரில் ஒருவர் ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்தின் போதும் கண்டிப்பாக பங்கேற்பார்.  இதன்போது அந்த பிரதான பாதுகாப்பு அதிகாரி ஊடாகவே முன்னாள் ஜனாதிபதியை தொடர்புகொள்ள முடியும்.

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற தினத்தன்றும் தாக்குதல்களுக்கு முன்னர் நிலந்த ஜயவர்தன, தொலைபேசி ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுடன் தொடர்பு கொண்டார்.  பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு அவர்கள் தொடர்புகளை பேணுவர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரியும் அவ்வாறே அழைப்புக்களை எடுப்பார். எனவே அவர்களது அழைப்புக்களும், இலக்கங்களும் எனக்கு நன்றாக ஞாபகத்தில் உள்ளது. ' என அந்த விமானப்படை வீரர் சாட்சியமளித்தார்.