கடன்களை தவிர்த்து எம்மால் பயணிக்க முடியாது : தயாசிறி 

By R. Kalaichelvan

20 Nov, 2020 | 04:55 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

சர்வதேச கடன்களில் எமது நாடு சிக்குக்கொண்டுள்ள போதிலும் கடன்களை நம்பியே எம்மால் முன்னோக்கி நகரவும் முடியும்,  கடன்களை தவிர்த்து எம்மால் பயணிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர சபையில் தெரிவித்தார்.

வரவு செலவு திட்டத்தில் குறைபாடுகள் உள்ளது உண்மையே, ஆனால் அதனை சகலரும் ஏற்றுக்கொண்டு பயணித்தாக வேண்டும் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று , 2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் முழு உலகமுமே வீழ்ச்சி கண்டுள்ள நிலைலேயே எமது அரசாங்கம் வரவு செலவு திட்டமொன்றை முன்வைத்துள்ளது. இதில் பல குறைபாடுகள் இருக்கலாம், அதற்கு ஜனாதிபதியோ பிரதமரோ காரணம் அல்ல. நாடாக அனைவருமே ஒன்றிணைந்து போராடினால் மாத்திரமே எம்மால் மீள முடியும்.

உலகமே இன்று பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்டுள்ளது, அவ்வாறு இருக்கையில் இலங்கை மாத்திரம் வளர்ச்சிபெற முடியாது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் அனைத்துமே வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் எமக்கு பலமான வரவு செலவு திட்டத்தை முன்வைக்க முடியாது.

எதிர்க்கட்சிகள் இந்த வரவு செலவு திட்டத்தை தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர். எமக்குள்ள கடன்கள், நாம் முகங்கொடுக்க வேண்டியுள்ள சவால்கள் என அனைத்தையும் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

நாம் கடன்களில் தான் முன்னோக்கி செல்கிறோம். எனவே கடன்களை தவிர்த்து எம்மால் பயணிக்க முடியாது. 2024 ஆம் ஆண்டு வரையில் வருடம் ஒன்றிற்கு  4.4 பில்லியன் ரூபா என்ற ரீதியில் கடன்களை செலுத்தியாக  வேண்டும். எனினும் கடன்களை செலுத்தும் நாடுகளில் நாம் முன்னணியில் உள்ளோம். எனவே எமக்கு எப்போதும் சர்வதேச உதவிகள் கிடைக்கும்.

எனினும் கடன்களில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்றால், எமக்கென்ற கொள்கையொன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right